ஒரு வக்கீல், ஒரு நீதிபதி, 49 பேரின் மனு; காலனியாதிக்க ராஜதுரோக குற்றம்?

modi
modi

இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 124 A, பிரிட்டிஷ் காலனியாதிக்க ராஜதுரோக தண்டனைக்கான குற்றம்?

விடுதலை அடைந்து எழுபதாண்டுகளுக்கு பின்னரும் அந்தப் பிரிவை பயன்படுத்தி இந்திய குடிமகன் ஒருவரை அச்சுறுத்துகிறது என்பது நமக்கு இழிவைத்தான் தரும்.

இதில் அரசுக்கு எந்த பங்கும் இல்லை என்று தாராளமாக சொல்லி  விட முடியும்.

ஆனால் உண்மை என்ன.

வழக்கு தொடுத்த வழக்கறிஞர் சுதிர் குமார் ஓஜாவுக்கு இந்த வழக்கு நிலைக்காது என்று தெரியாதா?

அவர் எழுநூறுக்கும் மேலான பொதுநல வழக்குகளை தொடுத்தவராம். எல்லா சின்ன சின்ன காரியங்களுக்காக. எதுவும் நிலைத்ததாக தகவல் இல்லை.

மோடி அரசுக்கு எதிராக யாராவது குற்றம் சுமத்தினால் அச்சுறுத்துவது மட்டுமே அவரது நோக்கமாக இருக்கும் போல்தான் தோன்றுகிறது.

கும்பல் கும்பலாக சேர்ந்து கொண்டு கொலைசெய்வதை 49 படைப்பாளிகள் கண்டித்து இதை தடுத்து நிறுத்த பிரதமரை கேட்டுக் கொண்டு கடிதம் எழுகிறார்கள். இதைத்தான் ராஜதுரோகம் என்கிறார் வக்கீல் ஓஜா. வக்கீல் சொல்வதாவது புரிந்து கொள்ள முடியும். அதுதானே அவரின் வேலை.

வழக்கமாக காவல் நிலையத்தில் புகார் – மறுத்தால் நீதிமன்ற மூலமாக நடவடிக்கை.  இதுதான் வழமை.

ஆனால் இங்கு வக்கீல் நீதிமன்றத்திலேயே புகார் கொடுக்கிறார். அதை தலைமை குற்றவியல் நீதிபதி சூர்யா காந்த் திவாரி அனுமதித்து முதல்  தகவல் அறிக்கை பதிவு செய்ய  காவல் துறைக்கு உத்தரவிடுகிறார். இதுதான் மிகுந்த மனவலியை தருகிறது. நீதிபதிக்கு உள்நோக்கம் இருக்க முடியாது. ஆனால் தவறான புரிதல் இருக்கலாம். அதுதான் இந்த நிலையை உருவாக்கி இருக்கிறது.

அந்த 49 பேரில் எவரும் அரசியல்வாதிகள் அல்ல. எந்த கட்சிக்கும் எதிரானவர்களும் அல்ல. பின் ஏன் அவர்கள் பேரில் இத்தனை வன்மம்?

ராமச்சந்திர குஹா, அடூர் கோபாலகிருஷ்ணன், ஷ்யாம் பெனகல், அபர்ணா சென், அனுராக் காஷ்யாப், மணிரத்னம், ரேவதி எல்லாம் எந்த வகையிலும் அரசியல் தொடர்பு உள்ளவர்கள் அல்ல. எல்லாரும் தங்கள் வழியில் ஆகச் சிறந்த படைப்பாளிகள். அவர்களுக்கு மோடி அரசை குறை சொல்லி ஆகப்போவதென்ன?

அதைவிட வேடிக்கை வேறு 62 பேர் மோடி அரசுக்கு ஆதரவாக அரசுக்கு கடிதம் எழுதி தாங்கள் எல்லாம் இந்த 49 பேருக்கு எதிரானவர்கள் என்று காட்டிக் கொண்டார்கள். அதாவது அரசுக்கு ஜால்ரா? எவரும் எப்படி மனுக் கொடுப்பது ராஜத் துரோக குற்றம் ஆகும் என்றும் விளக்கி சொல்லவே இல்லை.

ஆனால் இங்கே ஒருவர் இருக்கிறார். பொன்னார் என்ற முன்னாள் அமைச்சர். அவர் சொல்கிறார். மனு கொடுப்பது தவறில்லை. ஆனால் மோடி அரசு எதுவுமே செய்ய வில்லை என்று குற்றம் சாடுவதுதான் தவறு என்கிறார். குற்றம் சாட்டினால் என்ன நடவடிக்கை எடுத்தோம் என்று சொல்லி விட்டுப் போவதுதானே முறை. அதை விடுத்து ராஜ துரோகம் வழக்கா போடுவீர்கள்? கேட்டால் எங்களுக்கும் வழக்குக்கும் தொடர்பு இல்லை என்பீர்கள்.

இந்த கொடுமையை மேல் நீதிமன்றம் தாமாகவே முன்வந்து நடவடிக்கை எடுத்து உத்தரவிட்டால் தான் நீதி காப்பாற்றப்படும்.

இல்லாவிட்டால் வழக்கு நிலுவையில் இருக்கும். நடவடிக்கையும் இருக்காது. எப்போது வேண்டுமானாலும் நடவடிக்கை பாயும் என்ற அச்சுறுத்தல் மட்டும் இருக்கும். அதுதானே உங்களுக்கு வேண்டும்.

இதுதான் நமக்கு கவலையை தருகிறது. அதாவது எல்லாம் செய்வார்கள். ஆனால் எதிலும் எங்களுக்கு தொடர்பு இல்லை என்று சொல்லி விடுவார்கள்.

விஜயதசமி விழாவில் ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் பேசினார். அதில் வன்முறையை அரைகுறையாகத்தான் கண்டித்திருக்கிறார். அதாவது இந்த வன்முறை ஒருதலைப் பட்சமானது அல்ல என்கிறார். அதாவது தூண்டப் பட்டது என்று பொருள் எவ்வளவுதான் தூண்டினாலும் சட்டத்தை நாம் கையில்  எடுத்துக் கொள்ளக் கூடாது என்று  அறிவுறுத்தும் பகவத் ‘லிஞ்சிங்’ என்ற வார்த்தையை பயன்படுத்தி இந்தியாவின் பேரைக் கெடுக்காதீர்கள் என்கிறார்.

கொலை செய்வது பேரை கெடுக்குமா? லிஞ்சிங் நடைபெறுகிறது என்று குற்றம் சுமத்துவதால் பேர் கெடுமா? குற்றம் சுமத்தக் கூடாதா? குற்றம் நடந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுங்கள் என்று தன் அமைப்பின் தொண்டர்களுக்கு  அவர் அறிவுரை கூறி இருக்கிறார். அது சரி. ஆனால் கண்டிப்பவர்கள் குற்றம் சாட்டக் கூடாது என்கிறாரே அது சரியா?

அவசர நிலை பிரகடனத்தை நீதிமன்றங்கள் சட்டத்துக்கு புறம்பானது என்று அப்போது கூறவில்லை .

மக்கள்தான் இந்திராவை தூக்கி எறிந்து ஜனநாயகத்தை காப்பாற்றினார்கள்.

இப்போதும் நீதிமன்றங்கள் அமைதி காப்பது  சரியா?