63 வயது மாயாவதிக்காக ஷூ வை கழற்றிய 80 வயது அஜித்சிங்; திரும்பும் வரலாறு??!!

mayawati-ajit-singh
mayawati-ajit-singh

இன்னமும் நாட்டில் பல பாகங்களில் மேல்சாதி என்று சொல்லிக் கொள்ளும் மக்களுக்கு முன்னால் தலித்துகள் செருப்பு அணிய அனுமதிக்கப்படுவதில்லை.

ஆனால் உபி யில் வரலாற்றை திருப்பிக் கொண்டிருக்கிறார் மகர் சமூகத்தின் தலைவி மாயாவதி. பகுஜன் சமாஜ் கட்சி தலித் மக்களை ஒருங்கிணைத்து அதிகாரத்தை ருசித்த பிறகு எல்லா சமுதாய மக்களையும் பணிய வைக்கும் பணியை மிகவும் லாகவமாக செய்து வருகிறார்.

முதலில் தலித், பார்ப்பனர் முஸ்லிம் கூட்டணியை வெற்றிகரமாக உருவாக்கி ஆட்சியை பிடித்தார். பதவிக்காக பார்ப்பனர்களும் முஸ்லிம்களும் மாயாவதியிடம் அடங்கி போனார்கள். 

இன்று தலித் ஆதரவு இல்லாமல் யாறும் ஆட்சியை  பிடிக்க முடியாது என்ற சூழ்நிலையில் அந்த உண்மையை உணர்ந்து பிற்பட்ட யாதவ் மக்களின் தலைவர் அகிலேஷ் யாதவும் ஜாட் மக்களின் தலைவர் அஜித் சிங்கும் இன்று மாயாவதியுடன் உடன்பாடு செய்து கொண்டு தேர்தலை சந்திக்கிறார்கள். இது மகா கூட்டணி என்று அழைக்கப் படுகிறது.

ஒரு காலத்தின் யாதவ் மக்களும் ஜாட் மக்களும் தான் தலித்துகளை அடக்கி வைத்திருந்தவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. இன்று கூட முழுதும் தலித்துகள் அடக்கு முறையில் இருந்து விடுபட்டு விட்டார்கள் என்று கூற முடியாது. ஆனாலும் மாயாவதி தலித்துகளுக்கு வேண்டியது கௌரவம்தான் என்பதில் உறுதியாக இருக்கிறார்.

தன் ஆட்சி காலத்தில் கட்சி சின்னமான யானையை மாநிலம் எங்கும் பிரமாண்டமாக உருவாக்கினார்.

தன் உடையிலேயே தான் யாருக்கும் சளைத்தவர் இல்லை என்று நிரூபிக்க ஆரம்பித்தார். விலை உயர்ந்த ஆடைகளை அணிய ஆரம்பித்தார். விலை உயர்ந்த நகைகளை அணிய ஆரம்பித்தார். ஏன் மேல் குடிமக்கள் தான் அவற்றை அணிய வேண்டுமா? நாங்கள் அணியக் கூடாதா  என்ற கேள்வி அதில் மறைந்து இருந்தது.

இன்று எல்லா கட்சிகளையும் விட பகுஜன் சமாஜ் கட்சிதான் 650 கோடி ரூபாய் வங்கி டிபாசிட் வைத்திருக்கிறது. அடுத்துதான் சமாஜ்வாதி கட்சியும் தெலுகு தேசம் , காங்கிரஸ், பாஜக கட்சிகள்.

இந்நிலையில் சஹ்ரான்புரில் நடந்த மெகா கூட்டணி கூட்டத்தில் மாயாவதியும் அஜித்சிங்கும் அகிலேஷ் யாதவும் வருகை தந்தார்கள். அப்போது மாயாவதி மேடையில் ஏறியபின் பின்னால் வந்த அஜித்சிங்கை ஷூ வை கழற்றும் படி பிஎஸ்பி கட்சியின் நிர்வாகி ஒருவர் கேட்டுக் கொண்டார். கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளாமல் தன் ஷூவை கழற்றினார் அஜித்சிங். இதுபற்றி லோக் தள கட்சியின் நிர்வாகி கூறும்போது மேடையை அஜீத்சிங் புனிதமாக கருதுவதால் ஷூவை கழற்றியதாக சொன்னார்.

உபி யில் மரியாதை தருவதற்காக ஷூவை கழற்றுவது வழக்கம்.

தான் முதல் அமைச்சராக இருந்த போது மாயாவதி தன்னை சந்திக்க வரும் அதிகாரிகள், அமைச்சர்கள் யாரும் ஷூ அணிந்து வந்து சந்திக்க அனுமதித்த தில்லை என்பது வரலாறு. யாரும் அதை பிரச்னை ஆக்கியது இல்லை என்பதும் வரலாறு.   

அதற்கு அவர் சொன்ன காரணம் தனக்கு தூசு அலெர்ஜி என்பது. அதற்காக மற்றவர் ஷூ அணிந்து வருவது எப்படி தூசு பரப்புவது ஆகும் என்பதை யாரும் ஆராய்ந்ததில்லை.

வரலாறு திரும்புகிறது.