புகார் எழுந்தபின் தீர்ப்பை அகற்றிக் கொண்ட உயர் நீதிமன்ற நீதிபதி??!!

mcc-college
mcc-college

சென்னை தாம்பரம் கிறித்தவக் கல்லூரி மாணவிகள் சுற்றுலா சென்றபோது இரு பேராசிரியர்கள் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக எழுந்த புகாரை அடுத்து விசாரணை நடக்க அதை எதிர்த்து பேராசிரியர்கள் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ் வைத்தியநாதன் தனது தீர்ப்பில் கிறித்துவ மிஷனரிகள் பற்றிய கருத்தை தீர்ப்பின் ஒரு பகுதியாகவே சொல்லியிருந்தார்.

அதில் “கிறிஸ்தவ மிஷனரிகள் எப்போதுமே ஏதாவது ஒரு தாக்குதலை நடத்திக் கொண்டே தான் இருக்கிறது. பிற மதத்தினரை கிறிஸ்தவ மதத்துக்கு கட்டாய மதமாற்றம் செய்கிறது. ஆணும் பெண்ணும் ஒன்றாக படிக்கும் கிறிஸ்தவ கல்லூரி நிறுவங்களில் தங்களது குழந்தைகளுக்கு குறிப்பாக மாணவிகளுக்கு தகுந்த பாதுகாப்பு இல்லை என்று பல பெற்றோர் உணர்கின்றனர். இந்த கல்வி நிலையங்கள் பாரபட்சமற்ற கல்வியை வழங்கினாலும் மாணவர்களுக்கு ஒழுக்கத்தை  கற்றுக் கொடுக்கிறார்களா என்பது மிகப் பெரிய கேள்வியாக உள்ளது” என்று கருத்து தெரிவித்து இருந்தார்.

இதற்கு கிறிஸ்தவ பாதிரியார்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். இது பற்றி ஒய்வு பெற்ற நீதிபதி சந்துரு கூட ஒரு கட்டுரையை எழுதியிருந்தார். அவரே கிறித்துவக் கல்லூரியில் படித்தவர் என்பதால் மட்டுமல்ல இதுபோல் கருத்து சொல்வது அதுவும் தன் முன் இருக்கும் வழக்கிற்கு தொடர்பு இல்லாமல் சொல்வது தவறு என்று கூறியிருந்தார்.

இப்படி பல தரப்பில் இருந்தும் எதிர்ப்பு வந்த நிலையில் நீதிபதி வைத்தியநாதன் தான் தெரிவித்து இருந்த கருத்தை தீர்ப்பில் இருந்து நீக்கி உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

இதில் இருந்து தெரிவது என்னவென்றால் நீதிபதிகள் வழக்கிற்கு தொடர்பில்லாமல் கருத்து சொல்வது தவிர்க்கப்படக் கூடிய ஒன்று. தனது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை பற்றி பொதுமக்கள் தவறாக புரிந்து கொள்ள அது இடம் கொடுத்து விடும்.

இந்த தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளைத்தான் தங்கள் தீர்ப்புகளிலும் வெளிப்படுத்துவார்கள் என்று தவறாக புரிந்து கொள்ளப்படும் என்பதை அவர்கள் அறிய மாட்டார்களா? 

அவர் யார்? என்ன அவர் பின்புலம் என்றெல்லாம் விசாரித்தால் அது நீதிமன்றத்தின் மாண்பைக் குலைத்து விடுமல்லவா ?