மாட்டு மாமிசம் வைத்திருந்தால் ஐந்து ஆண்டு ஜெயில் ! 19 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த மகாராஷ்டிரா அரசு சட்டத்துக்கு பிரணாப் முகர்ஜி ஒப்புதல்! நிலைக்குமா சட்டம்?

         ஒன்றரைகோடி  பேர் வேலை செய்யும் தொழிலை ஒரே கையெழுத்தில் மாற்றி விட்டார் பிரணாப் முகர்ஜி.

         மகாராஷ்ட்ராவில் பசுக்களையும் கன்றுகளையும் கொல்ல தடை சட்டம் 1976  முதலே அமுலில் இருக்கிறது.  அப்போதே காளைமாடுகளையும் கொல்ல தடை சட்டம் இயற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி விட்டு காத்திருந்தது அரசு.    இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு திடீரென பிரணாப் முகர்ஜி ஒப்புதல் தெரிவித்து கையெழுத்து இட்டதால் உடனே சட்டமாகிவிட்டது.
       900  க்கும் மேற்பட்ட உரிமம் பெற்ற  மற்றும் ஏராளமான உரிமம் பெறாத மாட்டிறைச்சிக் கடைகள் இனி என்ன ஆகும் என்பது பெரிய கேள்வி. 
       வாழ்வாதாரம், ,உணவுப் பழக்கம் மத நம்பிக்கைகள், போன்ற பல பிரச்சினைகள் இந்த சட்டத்தில் உள்ளன.     இவைகளை பொது விவாதங்கள் நடத்தி அனைத்து தரப்பினரையும் இணங்கச் செய்து சட்டமாக்குவது நல்லதா?       எங்களிடம் ஆட்சி இருக்கிறது. எனவே நாங்கள் சொல்வதுதான் சட்டம்.     எல்லாரும் பணிந்துகொண்டு தான் ஆக வேண்டும்  என்ற அணுகுமுறை சரியா? 
       மகாராஷ்டிரா முதல்வரும்  குடியரசு தலைவரும் ஒரே சமுதாயத்தினர் என்பதுகூட  சந்தேக விதைகளை  தூவும்!
      ஆந்திரா, குஜராத் , ஜம்மு காஷ்மீர், கர்நாடகா, டெல்லி மற்றும் பல்வேறு வட கிழக்கு மாநிலங்கள் பசுவதைக்கு தடையும் மாட்டு மாமிசத்தை பயன்படுத்த பல்வேறு நிபந்தனைகளையும் கொண்டுள்ளன.     தமிழ் நாட்டிலும் சான்று பெற்று உரிமம் பெற்ற இடத்தில  மாட்டு மாமிசம் பயன் படுத்தும் வழக்கம் நடைமுறையில் இருக்கிறது. 
        ஜெயலலிதா முன்பு ஒருமுறை ஆடு கோழி பலி கொடுக்க தடை சட்டம் கொண்டு வந்து பின்பு அதை அமுல் படுத்த முடியாது என்பதை புரிந்து கொண்டும் எதிர்ப்புக்கு அஞ்சியும் சட்டத்தை வாபஸ் பெற்றுக் கொண்டார் என்பது வரலாறு. 
      புலால் உண்ணாமையை வலியுறுத்தி திருவள்ளுவர் ஒரு அதிகாரத்தையே அர்ப்பணித்திருக்கிறார். 
     வள்ளலாரும் ஜீவகாருண்யத்தை உபதேசிக்கிறார்.
      வங்காளம் உள்பட பல பகுதிகளில் பிராமணர்கள் மீன்களை கடல் புஷ்பம் என்று உண்கிறார்கள். 
       கோழிகளும் ஆடுகளும் மட்டும் எந்த ஆட்சேபணையும் இன்றி கோடிக்கணக்கில் தினமும் கொல்லப் படுகின்றனவே  அவைகளை தடுக்க முடியுமா? 
      எந்த உரிமைக்கும் நியாயமான கட்டுப்பாடுகள் உண்டு.    அதை அரசியல் சட்டம் அங்கீகரிக்கும்.  இந்தத் தடை நியாயமான கட்டுப் பாட்டில் வருமா? 
     ஆட்சி செய்யுங்கள் என்று அதிகாரத்தை கொடுத்தால்  மிரட்டப் பார்க்கிறார்களே?    
   

வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V)