இந்திய அரசியல்

உச்ச அநீதி மன்றம்????!!!!  மருத்துவப் படிப்பிற்கு தேசிய தகுதி நுழைவு தேர்வை  கட்டாயமாக்கும் தீர்ப்புக்கு ஏழை மாணவர்கள் தரும் பெயர்???!!!

Share

உச்ச நீதி மன்ற தீர்ப்பு அனைவரையும் கட்டுபடுத்தும் என்று  அரசியல் சட்டம் சொல்கிறது.

கட்டுப் படுத்தும் என்றாலும் விமர்சனத்துக்கு உள்ளாவதை யாரும் தடுக்க முடியாது.

சமஸ்க்ரிதம் படித்திருந்தால் தான் மருத்துவ கல்லூரியில் சேர முடியும் என்று ஒரு நிபந்தனை இருந்தது இந்தக் கால தலைமுறை பிள்ளைகள் பலருக்கு தெரியாமல் இருக்கலாம்.

கல்வி கற்கவே உரிமையில்லை என்ற நிலையில்தான் பல தலைமுறைகளாக பெரும்பான்மை இந்திய சமூகம் சனாதன தர்மம் என்ற பார்ப்பனீய தர்மத்தில் நிறுத்தப் பட்டிருந்தது.    வேதத்தை கேட்டால் காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்று என்று எழுதி வைத்தவர்கள் தானே.

இன்னமும் கல்வியும் செல்வமும் தங்களுக்கு ஒதுக்கியது போக மிச்சமிருந்தால்தான் மற்றவருக்கு என்ற விதியை சட்டமாக்க ஆதிக்க சக்திகள் முயன்று கொண்டேதான் இருக்கின்றன.

அதன் ஒரு கூறுதான் இப்போது உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பும்.     அதாவது  மருத்துவ படிப்பிற்கு தேசிய தகுதி நுழைவு தேர்வு நடத்த மருத்துவ கவுன்சிலும் ,மத்திய அரசும் மத்திய கல்வி பாடத்திட்ட  கழகமும் சேர்ந்து கேட்ட அனுமதியை உச்சநீதி மன்றம் வழங்கி விட்டது.

400    கல்லூரிகள்  52000   எம் பி பி எஸ்  இடங்களை பூர்த்தி செய்ய 2010  ல் கொண்டு வரப்பட்ட நுழைவு தேர்வு திட்டம் செல்லாது என்று உச்ச நீதி மன்றம்    2013  ல் தீர்ப்பு சொன்னது.    அதே உச்சநீதி மன்றம் 2016   Aprl  11 ம்  தேதிய  ஐந்து பேர் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் தீர்ப்பில் செல்லும் என்று தீர்ப்பளித்தது.

இப்போது அந்த  தீர்ப்பு மீண்டும் உறுதி செய்யப்பட்டு  அனில் தவே , சிவ கீர்த்தி சிங் , ஏ கே கோயல் என்ற மூன்று பேர் கொண்ட பெஞ்ச் இந்த ஆண்டிலேயே தேர்வை நடத்த அனுமதித்தது. . முந்தைய ஐந்து பேர் கொண்ட பெஞ்சிலும் அனில் தவே இருந்திருக்கிறார்.   அவர் எப்படி மாற்றி சொல்வார்.?

ஆறு மாநிலங்கள் தேர்வை ஆட்சேபித்து எழுப்பிய வாதங்கள் கருத்திலே  கொள்ளப் பட வில்லை. .

சி பி  எஸ் இ பாடத் திட்டதில்தான்  பொது தேர்வு இருக்குமாம்.   எல்லா மாநிலங்களிலும் மாநில பாடத்  திட்ட மாணவர்கள் தான் அதிகம்.    அவர்கள் கிராமப் புற பிற்படுத்தபட்ட மாணவர்களாகத் தான் இருப்பார்கள்.    லட்சகணக்கில் கட்டணம் வசூலித்து  தகுதி  நுழைவு தேர்வு பயிற்சி மையங்கள் கோடிக்கணக்கில் சம்பாதிக்கவும் அத்தகைய  பயிற்சி பெற முடியாத கிராமப் புற மாணவர்கள் மருத்துவ படிப்பை நெருங்க முடியாமல் தடுக்கவும் தான் இந்த நுழைவு தேர்வு பயன்படும்.

இப்போது தனியார் மற்றும் மாநில அளவில் அந்தந்த மாநில மொழிகளில் தேர்வு நடப்பதை இந்தி அல்லது ஆங்கிலம் என்று சுருக்கி விடுவார்கள்.  பாதிக்கப் படப் போவது கிராமப் புற மாணவர்கள்தான்!!

தனியார் கல்லூரிகள் கொள்ளை அடிப்பதை தடுக்க இந்த தேர்வு என்று நியாயப் படுத்த முயற்சிக்கிறார்கள். .   அதற்கு வேறு வழிகளை யோசிக்க வேண்டும்.

மாநிலப் பாடத் திட்டம் மருத்துவம் உள்ளிட்ட தொழிற் கல்வி பெற உதவாது என்று ஆக்குவதற்கு மத்திய அரசு சதி செய்கிறது.

சுகாதாரமும் கல்வியும் மாநிலப் பட்டியலிலும்  உள்ளவைதான் என்றால் இதில் மத்திய அரசு தலையிட்டு மாநில உரிமைகளில் தலையிடுவது ஏன் ?

அவசரநிலை காலத்தில் மாநிலப் பட்டியலில் இருந்த கல்வியை  பொதுப் பட்டியலில் சேர்த்தார்கள்.   அப்படி போதுபட்டியலில்  கல்வி இருக்கும் வரை மத்திய அரசோ அதன் அகில இந்திய அமைப்புகளோ இந்த அத்து மீறல்களை செய்து கொண்டுதான் இருப்பார்கள்.    கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற அனைத்து மாநிலங்களும் போராட வேண்டும்.

அகில இந்தியாவுக்கும் பொது கல்வி திட்டம் அமுலில் இல்லாதபோது மாநில கல்வி திட்டத்தை ஒதுக்கி விட்டு மத்திய கல்வி திட்டத்தின் அடிப்படையில் பொது நுழைவு தேர்வு நடத்துவது இயற்கை நீதிக்கு முரணானது என்பதை ஏன் உச்ச நீதி மன்றம் உணரவில்லை?

தேர்தல் நேரம் என்பதால் அரசியல் கட்சிகள் கண்டன அறிக்கைகள் விட்டு விட்டு ஓய்ந்து விடலாம்.

விடை தர  வேண்டிய பல கேள்விகளுக்கு உச்சநீதி  மன்றம் பதில் சொல்ல வில்லை.

+2  தேர்வுகளில் தேர்ச்சி பெற்றால் போதும் தொழிற்கல்வியில் சேரலாம் என்ற நிலையை மாற்ற முயற்சி செய்வது ஏன் ?    அது எதற்கும் உதவாத படிப்பு என்று நிலை நாட்ட சதிதானே?

தமிழ்நாடு இயற்றி வைத்திருக்கும் 2006 ஆண்டின் சட்டம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற்று அமுலில் இருக்கிறதே அதன் கதி என்ன?

அகில இந்திய தொகுப்புக்கு ஆந்திராவும் ஜம்மு காஷ்மீரும் 15 %  இடங்கள் தர மாட்டோம் என்று சொல்ல உரிமை இருக்கும்போது தமிழ்நாடு ஏன் அந்த உரிமையை நிலை நாட்ட வில்லை.

தேவையான மருத்துவ கல்லூரிகளை அதிகப் படுத்த அக்கறை காட்டாத மத்திய அரசு இருக்கும் இடங்களை உயர் சாதியினர் கபளீகரம் செய்ய உதவுகிறதே?

எதிர்ப்பு வலுக்கும் நிலையில் தனது வேடத்தை  மாற்றிக்கொண்டு இந்த ஆண்டு வேண்டாம் அடுத்த ஆண்டு தேர்வு நடத்தலாம் என்றோ தேர்வு தேதியை மாற்றலாம் என்றோ மத்திய அரசு நாடகம் ஆடலாம்.

மாணவர்களும் பொது மக்களும் தெருவில் இறங்கி போராடினால்தான் மாநில உரிமைகள் காக்கப்  படும் என்ற நிலை இருப்பது கசப்பான உண்மை.

கொசுறு;      ஐ ஐ டி மாணவர்கள் விருப்ப அடிப்படையில் சமஸ்க்ரிதம் கற்றுக் கொள்ளலாம் என்றும் அதற்காக தேவையான ஆசிரியர்கள் பணியிட காலி இடங்களை நிரப்ப உள்ளதாகவும் அமைச்சர் ஈரானி மேலவையில் தெரிவித்தார்.

 

 

 

This website uses cookies.