ஆபத்தான அணுக்கழிவுகளை கொட்டி வைக்க தமிழ்நாடுதான் கிடைத்ததா??!!

anuikalivu
anuikalivu

அணுமின்நிலையங்கள் இந்தியாவில் ஏழு இடங்களில் 22 அணு உலைகளுடன் இயங்கி வருகின்றன.

குஜராத்தில் கக்ராபூர், மகாராஷ்டிராவில் தாராபூர், கர்நாடகாவில் கைகாவில், ராஜஸ்தான், உத்தர பிரதேசம் நரோடாவில் மற்றும் தமிழ்நாட்டில் கல்பாக்கம், கூடம்குளம் ஆகியவைதான் ஏழு அணுமின்நிலையங்கள்.

அணுமின்நிலையங்களில் விபத்து ஏற்பட்டால் ஏற்படும் இழப்பை யார் ஈடு கட்டுவது என்பது பற்றி இதுவரை வரையறை செய்யப்படவில்லை.

அணுஉலைகள் தொடர்பாக தொடுக்கப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் 15 நிபந்தனைகளுக்கு உட்பட்டு அணு உலைகள் இயங்க அனுமதி அளித்தது. அந்த நிபந்தனைகளில் முக்கியமானது அணுக்கழிவுகளை அணு உலைக்கு வெளியே வைப்பதற்கான வசதியை ஐந்து ஆண்டுகளுக்குள் உருவாக்க வேண்டும் என்பது. 

அது இன்னும் முடிவடையாததால் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது தேசிய அணு மின் கழகம் அவகாசம் கேட்டதால் 2022க்குள் அணுக்கழிவுகளை அணு உலைக்கு வெளியே கட்டி முடிக்க அவகாசம் அளித்தனர்.

எனவே இப்போது அணுமின் கழகம் 22 அணு உலைகளிலும் கிடைக்கும் அணுக்கழிவுகளை கூடம்குளத்தில் சேமிக்க திட்டமிட்டு அதற்கான கருத்துக் கேட்புக் கூட்டம் ஜூலை 10 ம் தேதி நடத்த இருக்கிறது.

அது உண்மையில் நடக்குமா அல்லது சம்பிரதாயத்திற்காக நடத்தி கூடம்குளத்திலேயே அமைக்க திட்டமிடுவார்களா என்பது தெரியவில்லை.

அணுக்கழிவுகளில் ஆபத்து அதிகம். அதன் வீச்சை பாதிப்பில் இருந்து காக்க 24000 ஆண்டுகள் பாதுகாப்புடன் வைக்க வேண்டுமாம்.

அமெரிக்காவில் யுக்கா மலையில் இந்த அணுக்கழிவு மையம் அமைக்க கொடுத்த அனுமதியை ஒபாமா திரும்ப பெற்றுக் கொண்ட பிறகு அதன் ஆபத்து பற்றி அச்சம் அதிகமாகி இன்னும் எப்படி பாதுகாப்பாக சேமிப்பது என்பது பற்றிய நடைமுறை இன்னும் இறுதி செய்யப்படவில்லை. அமெரிக்காவில் Nuclear Waste Management Act  என்று தனிச்சட்டமே வைத்திருக்கிறார்கள். இந்தியாவில் Atomic Energy Act 1962  இருக்கிறதே தவிர கழிவுகளுக்கு என தனி சட்டம் இல்லை.

உச்சநீதிமன்றம் கழிவு பாதுகாப்பு பற்றி மையம் அமைத்த பிறகுதான் உலைகளை இயக்க வேண்டும் என்று சொல்லியிருந்தால் உலைகள் செயல்பட்டிருக்கவே  முடியாது.

இன்று இந்தியாவின் மொத்த மின்சார தேவையில் வெறும் 3.2% தான் அணுமின்சாரத்தால் கிடைக்கிறது. எனவே அணுமின்சாரம் ஒன்றும் தவிர்க்க முடியாதது அல்ல.

எப்படி இருந்தாலும் அணுக்கழிவு மையம் தமிழகத்தில் அமைய தமிழ்நாடு அரசு அனுமதிக்கக் கூடாது.

அதற்கு மாநில அரசு சுயமாக இயங்கும் அரசாக இருக்க வேண்டும். இப்போது இருக்கும் பாஜகவின் ஊதுகுழலாக இயங்கும் அதிமுக அரசுக்கு அந்த தைரியம் இருக்குமா?