கல்வி

பள்ளிச்சான்றிதழ்களில் சாதி மதம் குறிப்பிட வேண்டாம்; பள்ளிக்கல்வி இயக்குனர் அறிக்கை!!!

Share

நீண்ட கால கோரிக்கை ஒருவழியாக அரசால் ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கிறது.

பள்ளிகல்வி இயக்குனர் திரு வி சி ராமேஸ்வர முருகன் விடுத்துள்ள சுற்றறிக்கையில் இனி தலைமை ஆசிரியர்கள் பெற்றோர் எழுத்து மூலமாக வேண்டுகோள் விடுத்தால் மாற்றுச் சான்றிதழ்களில் சாதி மதம் குறிப்பிட வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளார்.

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் சினேகா பார்த்திபராஜா நீண்ட காலமாக போராடி மதம் சாதி இல்லா சான்றிதழ் பெற்றார் என்பது குறிப்பிடத் தக்கது.

அகில பாரதிய ஆதிவாசி விகாஸ் பரிஷத் மாநில தலைவர் சஞ்சீவ் என்பவர்  24/01/2019 அன்று கொடுத்த கோரிக்கை மனுவை அடுத்து இயக்குனர் இந்த சுற்றறிக்கையை அனுப்பி இருக்கிறார்.

சாதி மத ஒழிப்பில் இது முக்கியமான முன்னேற்றம்.

பெற்றோர் வேண்டுகோள் விடுத்தால் மட்டுமே வழங்கப் படும் இந்த சாதி மதமில்லா சான்றிதழ் வேண்டுகோள் இல்லாமலேயே எல்லாருக்கும் வழக்கமாக வழங்குவதுதான் நியாயமாக இருக்கும். வேண்டும் என்போர் வேண்டுமானால் குறிப்பிட்டு கொடுக்க மனு கொடுக்கட்டும். 

இட ஒதுக்கீடு உரிமை இதனால் பாதிக்கப்படாது. ஏனென்றால் அந்த உரிமை இல்லாமலேயே தனக்கு உரிய இடத்தை பெற்று விட முடியும் என நம்பிக்கை கொண்டோர்தான் வேண்டாம் என்பார்கள். அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.

சமுதாயத்தின் அனைத்து பிரிவினரும் ஐம்பது சதத்துக்கும் மேலாக சம உரிமை பெற்றுவிட்டார்கள் அல்லது படிப்பறிவில் சமமாக இருக்கிறார்கள் என்ற நிலை வரும்போது இட ஒதுக்கீடு தேவை இல்லை என்ற நிலை ஏற்படும்.

அதற்கு புள்ளி விபரத்துரை ஒவ்வொரு ஆண்டும் எல்லா சமுதாயத்தினர் பற்றிய கல்வி வேலை வாய்ப்பு நிலை பற்றிய அறிக்கை தர வேண்டும்.

வெளிச்சம் தரும் இந்த ஏற்பாடு அடுத்த கட்டம் நோக்கி நகர வேண்டும் என்பதே தமிழர் ஒற்றுமைக்கு பாடுபடும் அனைவரின் எதிர்பார்ப்பு ஆகும்.

இதே ஏற்பாடு அனைத்து இந்திய அளவில் விரிவு படுத்தப் படும் காலம்தான் இந்தியாவின் பொற்காலம்.

This website uses cookies.