கல்வி

மதிய உணவுத் திட்டத்தை கபளீகரம் செய்யப்போகும் ஹரே கிருஷ்ணா இயக்கம்?!

Share

தமிழக அரசின் மதிய உணவுத் திட்டம் நன்றாகத்தானே போய்க்கொண்டிருக்கிறது.

பொறுக்க வில்லை அவர்களுக்கு. மூக்கை நுழைத்து விட்டார்கள்.

மதிய உணவுத் திட்டத்தை நாமே நடத்திக் கொள்ளும்போது பலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறது. நம் உணவுப் பழக்கத்தை  ஒட்டி பிள்ளைகளுக்கு உணவு வழங்கப் படுகிறது. சத்துணவு முட்டையும் இதில் அடக்கம்.

இதில் இப்போது கர்நாடகாவில் இயங்கும் அட்சய பாத்திரம்  என்ற ஹரே கிருஷ்ணா இயக்கத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கிறது சென்னை மாநகராட்சி.

அவர்கள் பல மாநிலங்களில் இந்த உணவு வழங்கும் வேலையை செய்து  கொண்டிருக்கிறார்கள். உணவு வழங்குவது நல்ல விடயம்தான். இதில் என்ன ஆட்சேபணை இருக்கிறது என்றுதான் தோன்றும். உள்ளே நுழைந்தால்தான் விபரம் புரியும். இந்த வேலையை  செய்வதற்கு என்றுதானே அரசு யந்திரம் இருக்கிறது. அதை ஏன் கெடுக்க வேண்டும்?

ஆளுநர் பன்வாரி லால் புரோஹித் அந்த இயக்கத்துக்கு மைய சமையல் கூடம்  அமைக்க ஐந்து கோடி ரூபாயை தன்னுடைய  சிறப்பு நிதியில் இருந்து  ஒதுக்கி இருக்கிறாராம்.

இவர்கள் தங்களுடைய சமையல் மையம் மூலமாக பள்ளிகளுக்கு  தேவையான உணவுகளை சப்ளை செய்வார்கள். எதற்கு இந்த  வேண்டாத வேலை.? 

அதிலும் வெங்காயம் பூண்டு இல்லாத சமையலாக அது இருக்கும் என்கிறார்கள். உங்களுடைய உணவு பழக்கத்தை ஏன் எங்களிடம் திணிக்கிறீர்கள் .? நாளை முட்டையும் வேண்டாம் என்பார்கள். 

இதை எல்லாம் எதிர்க்கும் இடத்தில் அதிமுக இல்லை. எடப்பாடி இல்லை.

கிட்டத்தட்ட இது அவர்களின் அரசாகவே  மாறிவிட்டது.

நமது பயம் எல்லாம் உள்ளே நுழைந்திருக்கும் அட்சய பாத்திரம் நாளை தமிழகம் முழுதும் எல்லா பள்ளிகளையும் ஆக்கிரமிக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம்?

நமது வேலை வாய்ப்பை பறித்து நமது உணவு பழக்கத்தை மாற்றி ஒரு ஒப்பந்தம் தேவையா?

பதவி இன்று இருக்கிறது. நாளை எப்படி வேண்டுமானாலும் ஆகட்டும். பெயரைக் கெடுத்துக் கொள்ள வேண்டுமா? எடப்பாடி விழித்துக் கொள்ளட்டும்.

This website uses cookies.