மோடியா மற்றவர்களா என்பதல்ல, சங்கமா மற்றவர்களா என்பதே போட்டி??!!

Modi-RSS
Modi-RSS

இந்த தேர்தல் மோடியா மற்றவர்களா என்பதை போல ஒரு சித்திரம் வரையப்படுகிறது. அது உண்மையல்ல.

மோடி என்பவர் தனி சக்தியா? தனி கொள்கை கொண்டவரா? தனி சிந்தனையாளாரா? தனித்து தொண்டர்களை கொண்டவரா? தனி கட்சி எதையாவது கண்டவரா? தன் சக்தியால் குஜராத் முதல்வராகவும் இப்போது பிரதம அமைச்சராகவும் ஆனவரா? எதுவும் இல்லை.

மோடி என்பவருக்குப் பின்னால் ஆர்.எஸ்.எஸ் என்ற இயக்கம் இருக்கிறது. ஆர் எஸ் எஸ் கொள்கையே மோடியின் கொள்கை. ஆர்எஸ்எஸ் சிந்தனையே மோடியின் சிந்தனை. ஆர்எஸ்எஸ் தொண்டர்களே இன்று மோடியின் தொண்டர்கள். ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் கிளையான பாஜக தான் மோடியின் கட்சி. சங்கத்தின் பின்புலனால்தான் முதல் அமைச்சராகவும் பிரதம அமைச்சராகவும் ஆனார்.

மோடி என்றும் தன்னை சுய சக்தி கொண்டவராக நினைத்துக் கொண்டோ கற்பிதம் செய்து கொண்டோ செயலாற்றியதும் இல்லை.

அதிகாரிகளின் ஆலோசனைப்படி செயல்படுபவர்- பெரு நிறுவனங்களின் ஆதரவாளர் -நிர்வாகத்தில் – இந்த இரண்டும்தான் அவரது அடையாளம்.

வாஜ்பாய் எல்லா மதங்களுக்கும் பொதுவானவர் என்ற முத்திரையோடு  பணியாற்றியவர்- அவரையே சங்கம் எப்படி பயன்படுத்தியது?

வாஜ்பாய் எங்களுக்கு ஒரு முகமூடி என்று வர்ணித்தார் கோவிந்தாச்சார்யா !

மோடி தன் தலைமையை பாதுகாக்க சங்கத்தை பயன்படுத்துகிறார்- சங்கம் தன் கொள்கையை அமுல்படுத்த மோடியை பயன்படுத்துகிறது.

இதில் உண்மையான சக்தி என்று யாரை கூறுவீர்கள்?

மோடி போன்றவர்கள் இன்றைக்கு  வருவார்கள்- நாளை போவார்கள். சங்கம் என்றும் நிலைத்து இருக்கும். அடுத்து நல்ல அடிமை கிடைக்கும் வரை, அல்லது இவரது பயன்பாடு செல்லுபடியாகும் வரை.

எனவே மோடியை தனி நபராக பாவித்து வாராது வந்த மாமணி போல் போற்றுபவர்கள் இந்த உண்மையை உணர்ந்து கொண்டு அதன் பின் மதிப்பிடவேண்டும்.

சங்கம் ஏற்புடைத்தா அல்லவா என்ற விவாதம் வேறு. சங்கம் வேண்டும் என்பவர்களுக்கு சங்கத்தின் சித்தாந்தம் சரி என்பவர்களுக்கு மோடிதான் இப்போதைய கதாநாயகர்.

சங்கத்தின் கொள்கை நாட்டுக்கு நல்லதல்ல- ஏற்புடைத்தல்ல- நாட்டை துண்டாடக் கூடிய அளவு ஆபத்தானது என்ற கருத்தைக் கொண்டவர்கள் மோடியின் தனிப்பட்ட குண நலன்களைக் கொண்டு மட்டும் ஒரு முடிவுக்கு வந்து விடக் கூடாது என்பதுதான், ஆதரித்து விடக்கூடாது என்பதுதான் நாம் சொல்லும் கருத்து.