ஊழல் ஒழிப்பு அமைப்பின் உறுப்பினர்களை நியமிப்பதிலேயே ஊழலா; வெளங்கிடும்

lokayukta
lokayukta

ஊழலை அறவே ஒழிப்பதற்காக தோற்றுவிக்கப்பட்ட அமைப்பு லோக் ஆயுக்தா.

இதை நியமிக்க வேண்டிய தமிழக அரசு தானாக இதை செய்யவில்லை. உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பின் வேண்டாவெறுப்பாக செய்தது.

விரும்பி செய்திருந்தால் நியமனங்களில் எந்த குறைபாடும் இல்லாமல் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்.

இதற்கு தலைவர் உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கு முன் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியை கலந்து ஆலோசித்து இருக்க வேண்டும். ஏன் அதை தமிழக அரசு செய்யவில்லை?

லோக் ஆயுக்தா தலைவராக ஒய்வு பெற்ற நீதிபதி பி.தேவதாஸ் நியமிக்கப்பட்டிருக்கிறார். அதற்கான தேடுதல் குழுவில் முதல் அமைச்சர், சபாநாயகர், எதிர்க்கட்சி தலைவர் மட்டுமே இடம் பெற்றுள்ளனர்.

அதேபோல் உறுப்பினர்களும் சட்ட விரோதமாகத்தான் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஆந்திரா கர்நாடக மாநிலங்களில் லோக் ஆயுக்தா உறுப்பினர்களை நியமிக்கும் முன்பாக அந்தந்த மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளை கலந்து ஆலோசிக்கும் வகையில் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மேற்கண்ட காரணங்களுக்காக லோக் ஆயுக்தா உறுப்பினர்களை நியமித்த  அரசாணையை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் யோகாநந்தன் என்பவர் மனு செய்திருக்கிறார்.

அப்போது அரசு வழக்கறிஞர் ஆஜராகி லோக் ஆயுக்தா உறுப்பினர்களை தேர்வு செய்வது அரசின் கொள்கை முடிவு சம்பந்தப்பட்டது என்று கூறியதை அடுத்து விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

என்ன கொள்கை? கொள்ளையடிப்பதை கண்டு கொள்ளாமல் இருக்கும்படி ஒரு சார்பான நபர்களை நியமித்துக் கொள்வதுதான் கொள்கையா? 

மாண்புமிகு நீதியரசர் தேவதாஸ் மீது நடுநிலை வழுவாதவர் என்ற நற்பெயர் நிலைத்திருப்பது உண்மைதான். அது வேறு. அவரையும் மற்ற உறுப்பினர்களையும் தலைமை நீதிபதியின் ஆலோசனையின் பேரில் நியமிப்பதில் உங்களுக்கு என்ன ஆட்சேபணை? தலைமை நீதிபதியின் ஆலோசனை தேவையில்லை என்ற முடிவை ஏன் கொள்கை யாக்குகிறீர்கள்?

இப்போதிருக்கும் கமிட்டியில் எதிர்க்கட்சி தலைவர் ஆட்சே பித்தாலும் முதல்வரும், சபாநாயகரும், பெரும்பான்மை முடிவாக எந்த முடிவையும் எடுக்க முடியும். அதுவா முறை?

அதுவும் குறிப்பாக மத்திய அரசின் சட்டத்தில் தலைமை நீதிபதியை கமிட்டியில் நியமிப்பதை கட்டாயமாக ஆக்கி இருக்கும்போது தமிழக அரசு ஏன் அவரிடம் ஆலோசிப்பதை கூட தவிர்த்தது?

நீதிபதி தேவதாஸ் தவிர்த்து நீதித்துறையை சேர்ந்த ஒய்வு பெற்ற மாவட்ட நீதிபதிகள் கே ஜெயபாலன், ஆர்.கிரிஷ்ணமூர்த்தி, ஆகியோரும் நீதித்துறையை சாராத முன்னாள் அரசு பணியாளர் தேர்வு கழக தலைவர் ராஜாராம் மற்றும் கோவை அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ஆறுமுகம் நியமிக்கப்பட்டார்கள். நீதித்துறையை சார்ந்தவர்கள் மீது எந்த குற்றச்சாட்டும் குறையும் இல்லை. இதில் ராஜாராம் மற்றும் ஆறுமுகம் நியமனங்களை உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்திருக்கிறது.

இந்த லட்சணத்தில் இருக்கிறது அதிமுக அரசு ஊழலை ஒழிக்கும் அமைப்பை உருவாக்குவது.

டெல்லி மட்டும் என்ன வாழ்கிறது? நாட்டின் முதல் ஊழல் ஒழிப்பு அமைப்பான லோக் பால் அமைப்பு, ஒரு தலைவர், எட்டு உறுப்பினர்கள், அவர்களுக்கான அதிகாரிகள் எல்லாருக்கும் ஒரு அலுவலக இடத்தை மத்திய அரசு தேர்வு செய்ய முடியாமல் அவர்களை ஐந்து நட்சத்திர தி அசோக் ஓட்டலில் தங்க வைத்திருக்கிறார்கள்.  தற்காலிக ஏற்பாடாகவே இருக்கட்டும். நிரந்தரமாக இருக்கப்போகிற ஒரு அமைப்புக்கு முன்பே திட்டமிட்டு ஒரு அலுவலகம் அமைத்து தர முடியாத நிலையில்தானே இருக்கிறது மோடி அரசு?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here