நூறாண்டுகளாக ஜனநாயகத்திலும் நிலைத்த குடும்ப ஆட்சி??!

1919-ல்  காங்கிரஸ் தலைவராக மோதிலால் நேரு தொடங்கிய குடும்ப ஆதிக்கம்  ஜவஹர்லால் நேரு , பிரோஸ் காந்தி , இந்திரா காந்தி , சஞ்சய் காந்தி, ராஜீவ் காந்தி , மேனகா காந்தி, சோனியா காந்தி, ராகுல் காந்தி, வருண் காந்தி, என்று கடைசியில் 2019 ல் காங்கிரஸ் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டு பிரியங்கா காந்தி வரை நூறாண்டுகளாக தொடர்கிறது.

உலகில் வேறு எந்த குடும்பமும் ஒரு ஜனநாயக நாட்டில் இது போன்று ஒரு சாதனையை நிகழ்த்தி இருக்க முடியுமா என தெரியவில்லை.

மோதிலால் காஷ்மீர் பண்டிட் என்று அறியப்பட்டாலும் ஜவஹர்லால் தொடங்கி எல்லாருமே தங்களை சாதி மதம் எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டவர்களாகத்தான் அடையாளப்படுத்தி வந்திருக்கிறார்கள்.

பிரோஸ் ஒரு பார்சி. அவர் இந்திராவை மணந்தார். ராஜீவ் ஒரு இத்தாலிய கிறிஸ்தவரை மணந்தார். வருண் மட்டும் தான் பிராமணப் பெண்ணை திருமணம் செய்திருப்பதாக பெருமிதம் கொண்டார். பிரியங்காவும் ஒரு கிருஸ்தவரை மணந்தார். ஆனாலும் நேரு குடும்பத்தவர் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் அவர் ஒரு பிராமணராகவே பாவிக்கப்பட்டு ஆதரவளிக்கப்படுகிறார்.

காங்கிரஸ்காரர்களுக்கு இன்னும் முப்பதாண்டுகளுக்கு தலைவரை தேர்ந்தெடுக்கும் கவலை இல்லை. பிரியங்கா வந்து விட்டாரே. அதற்குப் பின்னும் அவரின் குழந்தைகள் தயாராகவே இருப்பார்கள். எனவே காங்கிரஸ் காரர்களுக்கு இனி எப்போதும் தலைவர் பிரச்னை வரவே வராது.

ஏதோ காங்கிரசில் மட்டும்தான் குடும்பமே கட்சி என்று இருப்பது போல் சொல்வது நியாயமாக இருக்காது. நாட்டில் பல கட்சிகளில் இப்படித்தான் இருக்கிறது. மக்கள் ஆதரவு இருக்கும்போது எதையும் குறை சொல்ல முடியாது.

பாஜக ஒன்றும் பெருமை கொள்ள வேண்டாம். அங்கு ஆர்.எஸ்.எஸ் இருக்கிறது.  அவர்கள் ஒரு தலைவரை புகுத்த மாட்டார்களே தவிர இன நலனுக்காக ஒரு படையையே தயார் செய்து வைத்திருக்கிறார்களே.

இன நலனுக்காக தியாகம் செய்ய ஒரு படையை உருவாக்கி வைத்திருக்கும் அவர்கள் ஏன் தனி நபரை துதிக்க வேண்டும்?

ஆக நாட்டில் காங்கிரசிலும் சரி பாஜக விலும் சரி ஆதிக்கம் அவர்கள் கையில்.

நேரு குடும்பம் சாதித்த சாதனையை ஒரு தாகூர், ஜாட், குர்மி, யாதவ், போன்ற இதர பிற்பட்டோரோ சிறுபான்மையோரோ செய்திருக்க முடியுமா? பிராமணர்களால் மட்டுமே செய்ய முடிந்த சாதனை இது என்பதை மட்டும் மறுக்க முடியாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here