வணிகம்

ரிசர்வ் வங்கியில் ஆதிக்கம் செலுத்த திட்டமிடும் மோடி அரசு – துணை போகும் ஆர் எஸ் எஸ்?!

Share

ரிசர்வ் வங்கியின் செயல்பாடுகளில் மத்திய அரசு  ஆதிக்கம் செலுத்த நினைப்பது விரும்பத் தகாத விளைவுகளை ஏற்படுத்தும் என்று வங்கியின் துணை இயக்குனர் விரால் ஆச்சார்யா பேசியது புயலை கிளப்பி  விட்டு விட்டது.

அதற்குப் பிறகு நிதி அமைச்சர் அருண் ஜெட்லி  2008 முதல் 2014 வரை வங்கிகள் வரையறை இன்றி கடன் கொடுத்து நாட்டின் நிதி நிலைமையை மோசமாக்கி விட்டதாக குற்றம் சாட்ட பிரச்னை எரிய தொடங்கியது.

ரிசரவ் வங்கியின் சட்டப் பிரிவு 7 ன் கீழ் மத்திய அரசு ரிசர்வ் வங்கியுடன் பேச்சு வார்த்தை நடத்தி தாக்கீதுகள் கொடுக்க வகை செய்கிறது. ஆனாலும் இதுவரை இந்த சட்ட பிரிவை எந்த மத்திய அரசும் பயன்படுத்தியதில்லை.

ஏனென்றால் அந்த பிரிவின் முதல் பகுதியில் ஆலோசனை செய்யும் உரிமையை பயன்படுத்த அந்த பிரிவை பயன்படுத்தி தான் பேச வேண்டும் என்று இல்லை.

இதுவரை எல்லா அரசுகளும் பேசித்தான் வந்திருக்கின்றன. ஆனாலும் சட்டப்படி பேசுவோம் என்று அழைத்ததில்லை. ஏனென்றால் அந்தப் பிரிவில் ஏதேனும் தாக்கீது தர வேண்டும் என்றால் தான் அந்த பிரிவை பயன்படுத்தி கட்டாயப்படுத்தவேண்டும். அதற்கு அவசியமே இல்லாமல் கலந்து பேசி முடிவுகளை மேற்கொள்வதுதான்  நல்லது. அந்தப் படியான சுமுக உறவு இதுவரை பேணி வந்திருக்கிறார்கள்.

நேரு காலத்திலேயே இந்த பிரச்னை வந்தபோது மத்திய அரசோடு கலந்து உரையாடி  முடிவுகளை மேற்கொள்ளும்போது மட்டும்  ரிசர்வ் வங்கி தன்னாட்சி பெற்ற அமைப்பாக இயங்க  வேண்டும் என்ற முடிவு எட்டப்பட்டது. மத்திய அரசு  ஒருபக்கமும் ரிசர்வ் வங்கி ஒரு பக்கமுமாக பயணிக்க முடியாது அல்லவா என்று  விளக்க வேறு  தரப் பட்டது.

இப்போது பாஜக அரசுக்கு  ரிசர்வ் வங்கியின் கையிருப்பில் உள்ள நிதி மத்திய அரசின் திட்டங்களுக்கு  தேவை.  அந்த  தேவை வங்கித்துறை அல்லாத நிதி நிறுவனங்களுக்கு ( Non banking Finance Companies )  உரியது. ஆம். அவை வாராக் கடன்களின் தாக்கத்தால் நிலை குலைந்து போய் கிடக்கின்றன.

அவைகளை தூக்கி நிறுத்து துடிக்கிறது மத்திய அரசு. அதற்கான நிதியைப் பெறத்தான் ரிசர்வ் வங்கி தனது கட்டுப் பாடுகளை தளர்த்த வேண்டும் என்று மத்திய அரசு விரும்புகிறது.

ஏதோ சிறு குறு மத்திய நிதி நிறுவனங்களுக்கு உதவி செய்ய விரும்புவதாகவும் அதற்கு ரிசர்வ் வங்கி முட்டுக்கட்டை போடுவது போலவும் ஒரு பிம்பத்தை உருவாக்க மோடி  அரசு விரும்புகிறது. ஆனால் உண்மை அதுவல்ல என்கிறார்கள். ரிசர்வ் வங்கியின் கையிருப்பு நிதியில் கை வைத்தால் அது விரும்பத் தகாத விளைவுகளை ஏற்படுத்தி விடும் என்று அஞ்சுகிறார்கள் ரிசர்வ் வங்கி இயக்குனர்கள்.

வருகிற  19 /11/2018  ல் நடைபெற இருக்கும் வங்கியின் நிர்வாக குழு கூட்டத்தில் இது பற்றி பொறி பறக்கலாம். வங்கியின் மத்திய குழுவில் இடம் பெற்றிருக்கும் ஆர் எஸ் எஸ் சார்புள்ள ஆடிட்டர் குருமூர்த்தி சதீஷ் மராத்தே போன்றவர்கள் இதற்கான அழுத்தத்தை கொடுக்க முயற்சிக்கலாம்.

எட்டப்படப் போகும் முடிவு நாட்டின் நிதிநிலையை பாதுகாக்கும் விதத்தில் அமைய வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.

This website uses cookies.