சட்டம்

வழக்கு வரட்டும்; தண்டனை சின்மயிக்கா வைரமுத்துவுக்கா என தீர்மானிக்கட்டும்?

Share

” 2004-ல் சுவிட்சர்லாந்து நாட்டில் நடந்த ஒரு நிகழ்ச்சியின் போது கவிஞர் வைரமுத்து என்னை ஓட்டல் அறைக்கு  தனியாக வருமாறு அழைத்தார். நான் மறுத்து விட்டேன் . இது போன்ற பாலியல் தொல்லை கொடுப்போர்கள் மீது பாதிக்கப் பட்டோர் குரல் எழுப்ப வேண்டும் ” இது பாடகி சின்மயி குற்றச்சாட்டு.

“அறியப் பட்டவர்கள் மீது அவதூறு பரப்புவது எனும் அநாகரிக கலாசாரம் பெருகி விட்டது. நான் அண்மைக்காலமாக அவமானப் படுத்தப் பட்டு வருகிறேன். உண்மைக்கு புறம்பானது எதையும் நான் பொருட்படுத்துவதில்லை” இது வைரமுத்துவின் பதில்

பொய்யர் என்று சின்மயி மீண்டும் கூற வழக்கு போட்டால் சந்திக்கத்  தயாராக இருக்கிறேன் என்று வைரமுத்து மீண்டும் பதில் தர வழக்கு போடுவதை சின்மயி ஆலோசிக்கிறாராம்.

வழக்கு வரும் முன்னே வைரமுத்து தண்டனை அனுபவித்தாகி விட்டது.

வழக்கு பதிவில்லை. விசாரணை இல்லை. சாட்சியம் இல்லை. தீர்ப்பு  இல்லை. ஆனால் விளைவு வைரமுத்து தண்டனை பெற்று விட்டார். இதுதானே எதார்த்த நிலைமை.

நாளை வழக்கு நடந்து வைரமுத்துவின் மீது எந்த தவறும் இல்லை என்று தீர்ப்பு  வந்தால் கூட இன்று அவர் இழந்த மரியாதையை மீண்டும் பெற முடியுமா என்பது சந்தேகமே?

சின்மயி வழக்கு தொடராமலே கூட போகலாம். அப்போது எது உண்மை என்று உலகிற்கு எப்படி தெரியும்?

சாட்சி என்னிடம் இல்லை. நான் சொல்வதை நீங்கள் நம்பத்தான் வேண்டும் என்று  சின்மயி சொல்வதை ஏற்றுக் கொண்டால் நாளை எல்லாப் பெண்களும் சொல்வதை அப்படியே நம்பித்தான் ஆக  வேண்டுமா?

அவர்தான் உன்னை  கூப்பிட்டாரே  ஏன் அவரை உன் திருமணத்திற்கு  அழைத்தாய் என்றால் அது மேனேஜர்கள் செய்த வேலை  என்கிறார்.

ஏன் அவருடன் மணமக்களாக  ஆசி வாங்கினாய் என்றால் பதில் இல்லை.

அதற்கு பிறகு ஏன் உன் தாய் அடிக்கடி அவர்க்கு வாழ்த்து சொல்ல வேண்டும்.? தவறு இழைக்கப் பட்டவர்கள் போலவா நடந்து கொண்டீர்கள்?

எச் ராசா சொல்கிறார். ஆண்டாள்  மீது அவதூறு சொன்னதற்கு அனுபவிக்கிறார் வைரமுத்து என்று. ஏன் நீங்கள் செய்த சதியாக அது இருக்க கூடாது என்று எண்ணத் தோன்றுகிறதா இல்லையா?

நீ உண்மையைத்தான் சொல்கிறாய் என்று எதை வைத்து நம்பசொல்கிறாய்?

சின்மயி பலர் மீது பாலியல் புகார் சொல்கிறார். ஒரு நடிகர் ஓட்டல் அறையில் தன் மீது  படர்ந்து கொண்டதாகவும் தான் கண்ணையும் உதட்டையும் மூடிக் கொண்டதாகவும் அவர் தன் முகத்தை எடுத்துக்கொண்டு விட்டதாகவும் சொல்கிறார்.

ஏன் அவர் மீது நடவடிக்கை எடுக்க வில்லை என்பதற்கு எந்த பதிலும் இல்லை.

” மீ டூ ” இயக்கத்தின் விளைவாக பெண்கள் பேசத் துவங்கி விட்டார்கள் என்பது வரவேற்க வேண்டிய ஒன்று என்பதில் சந்தேகம் இல்லை.

அடங்கிக் கிடந்தவர்கள் என்ற நிலை மாறி இன்று சம உரிமை பெற்ற உயிருள்ள ஜீவன்கள் என்ற நிலை வந்திருப்பதற்கு நாகரிக வளர்ச்சியும் கல்வியும் நீதி மன்றங்களும் தந்த பாதுகாப்பும் முக்கிய காரணங்கள்.

மீ டூ இயக்கம் தந்திருக்கும் விளைவு சட்டப் படியானதா என்பதை ஆராய வேண்டும்?

ஒருவர் மீது பாலியல் புகார் கொடுத்த உடனேயே அவர் அவமரியாதை என்னும்  தண்டனையை பெற்று விடுகிறார்.

வேண்டுமானால் அவதூறு வழக்கு தொடரலாம். அதன் தீர்ப்பு வருவதற்குள் யார் உயிருடன் இருப்பார்கள் என்பது தெரியாது. மக்கள் மனதில் அதற்குள் இந்த குற்றச்சாட்டு மறைந்தே போயிருக்கும்.

இன்றைக்கு அவதூறு பரப்புவது மட்டுமே நோக்கம் என்று இருந்தால் அதற்கு மாற்று தீர்வு என்ன?

பிரச்சனை இப்போதுதான் சூடு பிடித்திருக்கிறது.

விரைவில் தீர்வு வரும். அது பாதிக்கப் பட்ட பெண்களுக்கும் ஆண்களுக்கும் சமமாகவே இருக்கும்.

This website uses cookies.