சட்டம்

இட ஒதுக்கீடு பிரச்னையில் மீண்டும் குழப்பும் உச்ச நீதிமன்றம்?

Share

இட ஒதுக்கீடு என்று வந்து விட்டால் அதிகார வர்க்கம் என்ன செய்தாவது நீர்த்துப் போகச் செய்துவிடுவார்கள்.

மண்டல் கமிஷன் பரிந்துரைகளை நீர்க்துப் போகச் செய்ய கமண்டலத்தை கையில் எடுத்தது பாஜக. ராமர் கோயில் கட்ட ரத யாத்திரையை துவக்கினார் அன்றைய பாஜக தலைவர் எல் கே அத்வானி.

ஆந்திராவில் மலைவாழ் மக்கள்  அதிகம் வசிக்கும் பகுதிகளில் வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஆசிரியர்கள் ஆக நியமிக்கப் பட்டதால் அங்கு பெருத்த அளவில் ஆசிரியர்கள்  பள்ளிகளுக்கு வராமல் இருப்பது தடுக்கப் பட முடியவில்லை.

எனவே அந்த மாநில அரசு மலைவாழ் மக்கள் வாழும்  பகுதிகளில் அந்த மாவட்டத்தை சேர்ந்தவர்களே ஆசிரியர்களாக நியமிக்கப் பட்டால் ஆசிரியர்கள் வருகையின்மை ஒழியும் என்று திட்டமிட்டு 100 % பணிகளையும் உள்ளூர் மக்களுக்கே வழங்க உத்தரவாதமளிக்கும் சட்டத்தை அரசு உருவாக்கியது.

அந்த சட்டதைத்தான் செல்லாது என்று இப்போது உச்ச நீதி மன்றத்தின் அரசியல்  சாசன அமர்வு தீர்ப்பு சொல்லி இருக்கிறது. ஏனென்றால் அது பிற மாவட்ட மக்களின் உரிமையை பாதிக்கிறதாம்.

ஏற்கெனெவே ஐம்பது சதத்துக்கும் மேல் ஒதுக்கீடு கூடாது என்று ஒரு தீர்ப்பு சொல்லி இருக்கிறது உச்ச நீதி மன்றம். சம்பந்தம் இல்லாமல் அந்த பட்டியலில் கண்ட வகுப்பினரில் ஒதுக்கீட்டின் பலன்களை அனுபவித்தவர்கள் தான் மற்றவர்களுக்கு தடையாக இருப்பது  போல்  ஒரு தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறது  தீர்ப்பு. எஸ் சி எஸ் டி வகுப்பு பட்டியலை மீண்டும் மறு பரிசீலனை  செய்ய வேண்டும் என்று பரிந்துரை செய்திருப்பதாக தெரிகிறது .

இட ஒதுக்கீட்டிற்கு அடிப்படை  சாதி  என்னும்போது சாதி அடிப்படையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா வேண்டாமா?

1931 க்குப் பிறகு சாதி வாரி கணக்கெடுப்பு  நடைபெறவே இல்லை என்பது  சுதந்திரம் அடைந்தும் நாம் விடுதலை அடையவில்லை என்பதைத் தானே காட்டுகிறது. 

இட ஒதுக்கீடு  அமுல்படுத்த பட்டது  என்ன விளைவை  ஏற்படுத்தி இருக்கிறது என்பதையும் சாதி வாரி கணக்கெடுப்பின் மூலம்தான் அறிய முடியும்.

எல்லா  சாதி மக்களும் ஐம்பது சத அளவிற்கு குறையாமல் எல்லா துறைகளிலும் அவரவர் பங்கை பெற்று விட்டார்கள் என்றால் இட ஒதுக்கீட்டையே ஒழித்து விடலாமே. 

இட ஒதுக்கீட்டின் பலன் எல்லாருக்கும் போய் சேரவில்லை என்பது தெரிந்து  விடும் என்பதால்தான் சாதி வாரி  கணக்கெடுப்பு நடத்த மறுக்கிறார்கள்.

அதற்கு உச்ச நீதி  மன்றம் உத்தரவிட்டிருந்தால் நாடு பாராட்டி  இருக்கும்.

2021  ல்  நடை பெற இருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பில் சாதி வாரி  கணக்கெடுப்பும்  நடை  பெற்றால் மட்டுமே இட ஒதுக்கீட்டின் நோக்கம் நிறைவேறும்.

This website uses cookies.