சட்டம்

திருத்தப்பட வேண்டிய தீர்ப்பு; ஆள்வது பேடியா? நாராயணசாமியா?

Share

புதுவையில் காங்கிரசின்  நாராயணசாமி எதை செய்தாலும்  துணை நிலை ஆளுநர் கிரண் பேடி அரசியலாக்கி விடுகிறார்.

நாராயணசாமி மக்கள் பிரதிநிதி. மக்களுக்கு இலவச அரிசி தருவோம் என்பது தேர்தல் வாக்குறுதி. வெற்றி பெற்று அதை அமுல்படுத்த விரும்பும்போது துணை நிலை ஆளுநர் தலையிட்டு அரிசிக்கு பதில் பணமாக கொடுக்கலாம் என்று உத்தரவிடுகிறார். அதாவது நாராயணசாமியால் அரிசி கொடுக்க முடியவில்லை. பணமாக நான் கொடுத்தேன் என்று நிலை நாட்ட துணை நிலை ஆளுநர் விரும்புகிறார். அவர்தான் நியமன சட்ட மன்ற உறுப்பினர்களாக பாஜக வினரை நியமித்தவர். ஆக அரசியல் செய்கிறார் பேடி. அவர் பாஜக வின் முதல் அமைச்சர் வேட்பாளராக டெல்லியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர். இப்போது துணை நிலை ஆளுநராக கட்சி வேலை செய்கிறாரா என்ற கேள்விக்கு வித்திட்டு விட்டரர் .

வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் குடியரசுத் தலைவரிடம் கருத்து கேட்கப்பட்டுவிட்டால் அதை அப்படியே அமுல்படுத்த வேண்டியது  முதல் அமைச்சரின் கடமை சட்டத்தை மேற்கோள் காட்டி  தீர்ப்பு சொல்லி  இருக்கிறது. இது சரி  என்று தோன்றவில்லை. தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீடு செய்வார்களா என்பதும்  தெரியவில்லை.

குடியரசுத் தலைவர் உத்தரவாக இருந்தாலும் அது மக்கள் பிரதிநிதிகளின் முடிவுக்கு மாறாக இருந்தால் ஏன் ரத்து செய்யக் கூடாது?

சின்ன சின்ன பிரச்னைகளில் கூட சட்டத்தின் பேரால் மக்கள் குரலுக்கு எதிராக தீர்ப்பு சொல்ல வேண்டிய கட்டாயத்தில் நீதின்றங்கள் இருக்கின்றன என்பது மிகவும் வருந்தத் தக்கது. நீதிபதியே கூட தான் நீதிபதி என்ற இடத்தில் இருந்து விலகி தீர்ப்பு சொல்ல விரும்பவில்லை என்று சொல்கிறார். நீதிபதிகளின் முடிவும் கூட அறத்தின் பால் நிற்பது என்பது சட்ட பூர்வமானதுதான். அதை நீதிபதி அவர்கள் கவனிக்க மறந்து விட்டாரோ என்பதுதான் நமது கருத்து.

துணை நிலை ஆளுநர் ஏன் இது பற்றி மாநில அரசுடன் எந்த நிலையிலும் விவாதிக்கவில்லை என்று நியாயமாக கேள்வி கேட்கும் நீதிபதி அந்த செயல் மக்கள் பிரதிநிதிகளின் முடிவுக்கு மாறாக இருப்பதால் எப்படி செல்லும் என்ற கேள்விக்கு விடை தர தவறி விட்டார். சட்டத்தை அப்படியே வரிக்கு வரி பொருள் கொள்ளக் கூடாது. அதன் நோக்கத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும். எந்த சட்டமும் மக்கள் பிரதிநிதிகளின் முடிவை  கேள்வி கேட்கும் உரிமையில்லாமல் அப்படியே யாருக்கும்  தாரை  வார்த்து விடாது .

குடியரசுத் தலைவர் தானாக முடிவெடுக்கிறாரா அல்லது வெளியில் இருந்து அழுத்தம் வருகிறதா என்பது பற்றி தெளிவில்லை. அழுத்தம் பற்றி மற்றவர்களுக்கு தெரியாத நிலையில் அனுமானிக்கத்தான் முடியும். எனவே முடிவு சரியா இல்லையா என்பதை நீதிமன்றங்கள் அலசி  ஆராய்வதில் இருந்து பின் வாங்கக் கூடாது.

பேடியீன் அரசியலுக்கு இந்த தீர்ப்பு வலு  சேர்க்கும் என்பதுதான் நமது அச்சம்.

This website uses cookies.