சட்டம்

மாண்புமிகு நீதியரசர் ஆறுமுகசாமி ஆணையத்தில் ஒபிஎஸ்- இபிஎஸ் நடத்தும் நாடகம்??!!

Share

ஜெயலலிதா மரணத்தில் இருக்கும் மர்மங்களை வெளிக்கொணருவதில் ஒபிஎஸ்-இபிஎஸ் இருவருக்கும் உண்மையிலேயே அக்கறை இருப்பதாக தெரியவில்லை.

இருந்திருந்தால் நேரடியாகவே வழக்கை சிபிஐ-க்கு விசாரிக்க சொல்லி கொடுத்திருப்பார்கள். அவர்கள் விசாரித்து குற்றம் இருந்தால் நடவடிக்கை இல்லையென்றால் வழக்கை முடித்து வைத்து பிரச்னையை எப்போதோ தீர்த் திருப்பார்கள்.

அப்படி முடிவதில் இருவருக்கும் உடன்பாடு இல்லாமல் தான் ஏதோ நாங்களும் நடவடிக்கை எடுத்தோம் என்று தொண்டர்களை சமாதானப்படுத்த இந்த கமிஷனை போட்டிருக்கிறார்கள் என்றுதான் பொதுமக்கள் கருதுகிறார்கள்.

விசாரணை கமிஷன் சட்டம் பிரிவு 5 (5)ன் படி விசாரணை வெளிப்படையாக நடத்த வேண்டியதுதானே. ஏன் பத்திரிகைகளை சாட்சிகளின் வாக்குமூலங்களை சுதந்திரமாக வெளியிட அனுமதிக்காமல் கமிஷன் அனுமதிக்கும் செய்திகளை மட்டும் வெளியிட அனுமதிக்கிறார்கள்? கலைஞர் மீதான சர்க்காரிய கமிஷன் வழக்கு வெளிப்படையாக நடந்து விசாரணை விபரங்கள் வெளிவந்து மக்களிடையே பெருத்த அலைகளை ஏற்படுத்த வில்லையா? ஆனால் அதன் அடிப்படையில் போடப்பட்ட வழக்கில் போதிய சாட்சியம் இல்லாமல் எம்ஜிஆர் தலைமையில் ஆன அரசு பத்து வருடங்கள் கிடப்பில் போட்டு பின்னர் சட்ட அறிவுரைப்படி வழக்கில் குற்ற வனைவு செய்ய முடியாமல் கைவிடப் பட்டது.

அப்போல்லோ மருத்துவமனை மருத்துவ ரீதியில் தவறிழைத்ததா என்பது விசாரணையின் ஓர் அம்சம் இல்லா நிலையில் மருத்துவர் குழுவை அமைப்பதில் ஏன் அரசு அத்துணை கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது? அதனால் தான் இப்போது உச்சநீதிமன்றம் தடை கொடுத்து இருக்கிறது. இதனால் ஒபிஎஸ் சாட்சியம் அளிப்பதில் இருந்து  தப்பித்து அவகாசம் எடுத்து கொண்டிருக்கிறார்.

இருட்டு அறையில் கருப்பு பூனையை தேடும் முயற்சியில் விசாரணை கமிஷன் இயங்கி வருகிறது.

தேவையற்ற சாட்சிகள் நேரம் கடத்துவதற்குத்தான் பயன்படும். எம்ஜிஆர் காலத்து சிகிச்சை ஆவணங்களை கேட்கும்போது எதற்காக கேட்கிறார்கள் நோக்கம் என்ன கேள்வி எழுகிறது அல்லவா?

கமிசன் அமைத்த போதே 26/09/2017ல் திமுக தலைவர் ஸ்டாலின் வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் என்று கருத்து தெரிவித்தார். அது இப்போது உண்மையாகிவிட்டது.

 சட்ட அமைச்சர் சிவி சண்முகம் சுகாதார துறை செயலர் ராதாகிருஷ்ணனை கஸ்டடியில் எடுத்து விசாரித்தால் உண்மை வெளியே வந்து  விடும் என்றும் உடனே எப்.ஐ.ஆர் போட வேண்டும் என்றும் கருத்து தெரிவித்தார். அப்படி நடவடிக்கை எடுப்பதில் இருந்து யார் உங்களை தடுத்தார்கள்? அதிகாரத்தை கையில் வைத்துக் கொண்டு தொண்டர்களை ஏமாற்றும் நோக்கில் மனம் போனபடி பேசுவதை எப்படி ஏற்று கொள்ள முடியும்?

இனி எப்போது தடை உடைவது? எப்போது சாட்சியம் முடிந்து அறிக்கை கிடைப்பது?    அதுவும் ஏற்றுக்  கொள்ளப்பட்டு நடவடிக்கை மேற்கொண்டு மீண்டும் வழக்கு போட்டு எப்போதுஉண்மை வெளி வருவது?

கமிஷன் என்றால் மூன்று மாதத்தில் விசாரணை முடித்து நடவடிக்கை எடுத்தால் அதில் பொருள் இருக்கும். இப்படி ஆண்டுக் கணக்கில் இழுத்து அடிப்பதற்கு பெயர் என்ன?

                    விசாரணைக் கமிஷன் ஏன் அமைத்தார்கள் என்பதற்கு ஒரு விசாரணைக் கமிஷன் போட்டால்தான் உண்மை வெளி வரும்போல. 

This website uses cookies.