சட்டம்

நிர்மலாதேவிக்கு பிணை வழங்க மறுப்பதன் பின்னணி?! வாய் திறப்பார் என்ற பயமா?

Share

கொலை வழக்குகளில் கூட குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துவிட்டால் அல்லது மூன்று மாதங்களுக்குள் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யா விட்டால் பிணையில் விடுவது வழக்கமாக இருக்கிறது.

ஆனால் அருப்புகோட்டை தேவாங்கர் கலை கல்லூரி பேராசிரியர் நிர்மலாதேவி  , துணை பேராசிரியர் முருகன், பிஎச்டி மாணவர் கருப்பசாமி ஆகிய மூவருக்கும் மட்டும் தொடர்ந்து பிணை மறுக்கப்பட்டு அவர்கள் சிறையில் இருந்து கொண்டே வழக்கு விசாரணையை சந்திக்கட்டும் என்று நீதிமன்றமே கருதுகிறது என்பது சற்று நெருடலாக இருக்கிறது .

அவர்கள் மீது இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவுகள்  370 (1) (3) ,120(b) 354A, மற்றும் விபசார ஒழிப்பு சட்டம்  போன்ற பல சட்டப் பிரிவுகளில் குற்றப்  பத்திரிகை தாக்கல் ஆகி இருக்கிறது.

அவர்களுக்கு சென்னை உயர்நீதி மன்றம் பிணை மறுத்து விட்டதால் அவர்கள் உச்ச நீதிமன்றத்துக்கு பிணை கேட்டு செல்ல விருப்பதாக தகவல்.

விருதுநகர் மாவட்ட மகளிர் நீதி மன்றத்தில் விசாரணை நடைபெற இருக்கிறது.

மாணவிகளை தவறாக வழி நடத்த முயற்சித்த குற்றம் சாதாரணமானதல்ல என்பதும் குற்றம் நிருபிக்கப் பட்டால் அவர்கள் கடுமையாக தண்டிக்கத் தக்கவர்கள் என்பதும் எல்லாராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட நியாயம்தான்.

ஆனால் இதில் மாநில ஆளுநர் பந்வாரிலால் புரோஹித் சம்பந்தப் பட்டிருப்பதுதான் சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. அவசர அவசரமாக அவர் சந்தானம் தலைமையில்  ஒரு நபர் கமிட்டியை நியமித்து ஒரு அறிக்கையை பெற்று வெளியிட முயற்சித்ததுதான் சந்தேகத்தின் முதல் விதை. அதை நீதிமன்றமே ஏற்றுக் கொண்டதாக தெரியவில்லை.

உச்சநீதி மன்றம் நிச்சயம் பிணை வழங்கும் என நம்பப் படுகிறது.  கொடுத்தால் சென்னை உயர் நீதிமன்றம் பிணை தர மறுத்தது தவறு என்றாகி விடும்.

எல்லாருக்கும் ஒரு நீதி அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு ஒரு நீதியா என்ற கேள்விக்கு நீதித்துறை என்ன பதில் சொல்லும்?

எதையோ மறைக்க முயற்சிக்கிறார்கள் என்ற கேள்வியை அப்படியே விட்டு விடுவார்களா?

எந்தக் கோணத்தில் பார்த்தாலும் அவர்களுக்கு பிணை மறுப்பது சட்டத்தின் படியும் வேறு வழக்குகளில் கடைப்பிடிக்கப் படும் நடைமுறைகளின் படியும் தவறு என்றே தோன்றுகிறது.

விசாரணைக்கு பிறகு குற்றம் நிரூபணம் ஆனால் அவர்களை தூக்கில் வேண்டுமானாலும்  போடுங்கள்.  அதுவரை எல்லா வழக்குகளிலும் என்ன நடைமுறை பின்பற்றப் படுகிறதோ அதையே அவர்களுக்கும் பின் பற்றி பிணை வழங்குவதை  பொறுத்து மட்டும் கடைப்  பிடிப்பதுதான் சரி என்பதே நமது கருத்து.

உச்ச நீதி மன்றம் என்ன செய்யப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்?!

This website uses cookies.