ஞாயிறன்று நாடு முழுதும் சுய கட்டுப்பாடுடன் முடங்கச் சொன்னார் பிரதமர் மோடி. நாடு அப்படியே கட்டுப்பட்டது. இதுவரையில் இப்படி நிகழ்ந்தது இல்லை என்னும் அளவுக்கு மிகப் பெரிய விழிப்புணர்வை ஒட்டுமொத்த நாடும் காட்டியது.
14 மணி நேரம் ஒரு வைரஸ் உயிரோடு இருக்கும் என்றால் அன்று மட்டும் தனித்திருந்தால் முழுதும் கட்டுப்பட்டு விடும் என்று பொருள் அல்ல. நம்மால் முடியும் என்று நாமே தனித்திருந்து காட்டிய எச்சரிக்கை உணர்வு அது.
ஆனால் மாலை ஐந்து மணிக்கு மாடியில் நின்று வாசலில் நின்று ஒலி எழுப்பி மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் துணை நிற்போருக்கும் நன்றி சொல்லி ஊக்கப்படுத்தும் விதமாக ஒலி எழுப்புங்கள் என்றார் மோடி.
அதைத்தான் பலரால் புரிந்து கொள்ள முடியவில்லை. எதற்காக இந்த ஒலி எழுப்புதல்? இதனால் என்ன நன்மை விளைந்து விடும்? ஏதாவது மருத்துவ காரணம் இருக்குமோ என்றெல்லாம் பலர் சிந்தித்து பார்த்தும் விடை கிடைக்கவில்லை.
கிடைத்த விடை அரசியல் பூர்வமானது. ஆம் மோடி சொன்னால் கேட்க வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்த முன்னெடுத்த அரசியல் நோக்கமுள்ள பரிந்துரை என்பதுதான் அந்த விடை.
மோடி சொன்னதை செய்ய வேண்டும் என்ற கட்டாயம் ஏதும் எல்லை. பரிந்துரைதான். ஆனால் சொல்வது பிரதமர் ஆயிற்றே? அவர்க்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்ற உணர்வு எல்லாருக்கும் ஏற்படுவது இயல்பு.
அது சரியா என்பதுதான் கேள்வி?
வருத்தமான உண்மை என்னவென்றால் பல இடங்களில் பிரதமரின் பரிந்துரையை தவறாக புரிந்து கொண்டு தெருவில் கூடி கூட்டம் கூட்டமாக ஒலி எழுப்பிக் கொண்டு ஊர்வலமாக சென்று இருக்கிறார்கள். திருவிழா போல கூட சொல்லவில்லை பிரதமர். ஏதோ வெற்றி ஊர்வலம் போல சென்றால் அது நோக்கத்திற்கு பழுது அல்லவா?
நோக்கம் நல்லதாக இருந்தாலும் அதை மக்கள் தவறாக புரிந்து கொண்டால் விளைவு நல்லதாக அமையாது.
தமிழ்நாட்டில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ், மருத்துவர் ராமதாஸ், ரஜினிகாந்த், விஜயகாந்த் என்று மணி அடித்தவர்களின் பட்டியலை பார்க்கிற பொது ஏதோ கூட்டணி அமைந்தது போலவே இருந்தது.
மோடி என்ற பிம்பம் கட்டமைக்கப் பட விரும்புவது பாஜக என்ற கட்சியின் உரிமை. அதற்கு இரையாகாமல் சுய சிந்தனையில் செயல்படுவது பொதுமக்களின் கடமை.