கொரானா வந்தாலும் வந்தது எதில்தான் அரசியல் என்றில்லை. எல்லாவற்றிலும் புகுந்து புறப்பட்டுக் கொண்டிருக்கிறது.
இன்று மத்திய அரசு பிரதமர், குடியரசுத் தலைவர் அமைச்சர்கள் மற்றும் எம்பிக்களின் சம்பளத்தில் முப்பது சதம் குறைத்து அவசர சட்டம் கொண்டு வந்திருக்கிறது .
அதில்கூட யாரும் பெருத்த ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. எல்லாரும் நிதி அளிக்கும்போது அவர்களும் அளிப்பதாக இருக்கட்டும் .
ஆனால் எம்பிக்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை இரண்டு ஆண்டுகளுக்கு நிறுத்தி வைப்பதாக அரசு அறிவித்திருப்பதில்தான் சந்தேகம் வருகிறது.
இரண்டு ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் தடையை நீடிப்பார்களா என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை. ஏதாவது காரணம் சொல்லி இந்த நிதி ஒதுக்கும் அதிகாரத்தை பறித்து விடுவார்களா?
மக்கள் பிரதிநிதிகள் அந்த நிதியை தொகுதி மேம்பாட்டுக்குத்தானே செலவு செய்யப் போகிறாகள். அவர்களுக்கும் மக்களுக்கும் இருக்கும் தொடர்பு என்பது இந்த நிதிதான். இது அல்லாமல் தொகுதியைப் பற்றி நாடாளுமன்றத்தில் பேச முடியும் என்பது மட்டுமே மிச்சம் இருக்க போகிறது.
இது ஒரு வகையில் எம்பிக்களின் பல்லைப் பிடுங்கும் வேலைதான்.
எனவே மத்திய அரசு இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இதனால் பாதிக்கப் படப் போவது எங்கள் எம்பிக்களும்தானே என்று நீங்கள் சொல்ல முடியாது. ஏனென்றால் நீங்கள் அதிகாரத்தில் இருக்கிறீர்கள்.
எதிர்க்கட்சி எம்பிக்கள்தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள்.
நோய் தடுப்புக்கு நிதி தேவை. அதற்காக மக்கள் பிரதிநிதிகளின் உரிமை பறிப்பில் ஈடுபடக் கூடாது.
சோதனையான இந்த நேரத்தில் மத்திய அரசை விமர்சிக்கும் வகையில் நடந்து கொள் வதை ஒரு பொறுப்புள்ள அரசு தவிர்க்க வேண்டும்.
பிரதமர் எதிர்க்கட்சித் தலைவர்களுடன் பேசினார். இதுபற்றி பேசினாரா? முக்கிய முடிவுகளை எடுக்கும்போது தொடர்பு உடையவர்களை கலந்து கொண்டு எடுத்தால் அதில் எல்லாரும் பங்கு பெற்ற நிறைவு இருக்கும்.
இறுதி முடிவை எடுக்கும் அதிகாரம் உங்களிடம் இருக்கும்போது ஆலோசிப்பதில் ஏன் தயக்கம்?