பொய்த்தது காவிரியா ஒருமைப்பாடா ? குற்றவாளி யார் ?

Share
இந்த ஆண்டும் காவிரியில் ஜூன் மாதம் தண்ணீர் வராது என்று தெரிந்து விட்டது.   தெரியாதது இந்த நாட்டில் சட்டம் ஆட்சி செய்கிறதா இல்லையா என்பதுதான்.

பாகிஸ்தான் ,சீனா போன்ற அண்டை நாடுகளுடன் நாம் நதி நீரை பகிர்ந்து கொள்கிறோம்.  ஒப்பந்தங்கள் நடைமுறைப்படுத்தப்பட  பெரிய பிரச்சினைகளை நாம் எதிர் கொண்டதில்லை .    நதி நீர் உற்பத்தி ஆகும் நாட்டிற்கு என்றும் வெளியேறும் நாட்டிற்கு என்றும் உலக அளவில் உடன்படிக்கைகள்  நடைமுறையில் இருக்கின்றன.

மாநிலங்களுக்கு இடையிலும் நதி நீர் வழக்குகளை தீர்த்து வைக்க தனி சட்டமும் உள்ளது.   அந்த நீதிமன்றமும் பல ஆண்டுகள் விசாரித்து ,நிபுணர் குழுக்களை அமைத்து இரு தரப்பையும் தீர விசாரித்து இறுதி தீர்ப்பையும் வெளியிட்டு அதை அரசிதழிலும் வெளியிட்டு விட்டது.   அதை அமுல்படுத்துவதற்கான ஆணையம் அமைக்க வேண்டியதுதான் பாக்கி.

அதை தட்டி கழிக்க மத்திய அரசுக்கு தயக்கம்  ஏன் ?

இறுதி தீர்ப்பில் இரு தரப்புக்குமே திருப்தி இருக்கிறதா இல்லையா என்பது கேள்வியல்ல.   ஏனென்றால் இரு தரப்பும் சம்மதித்தால் தான் தீர்ப்பை அமுல் படுத்துவோம் என்றால் நாட்டில் எந்த தீர்ப்பும் அமுல் படுத்தவே முடியாது.

தண்ணீர் இருந்தால்தான் தருவோம் என்று கர்நாடகா  சொன்னால் தீர்ப்பு எதற்கு ?   நீர் வரத்து காலத்தில் எந்த தீர்ப்பும் தேவையில்லாமலே நீர் வந்து விடுமே? வெள்ளக் காலத்தில் தண்ணீரை கர்நாடகம் தக்க வைத்துக்கொள்ள முடியுமா ?   தமிழகம் என்ன கழிவு நீர் குட்டையா?

தீர்ப்பை அமுல்படுத்த   மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டும் மத்திய அரசு காலம் கடுதுவது எதற்காக ? வறட்சி காலத்தில் எப்படி பங்கிட்டுக் கொள்வது என்பது பற்றியும் இறுதித் தீர்ப்பில் கூறப்பட்டிருக்கிறது .  எனவே நேரடியாக மேலாண்மை வாரியம் அமைக்காமல் தற்காலிக காவிரி நீர் இறுதி தீர்ப்பு அமலாக்க திட்டம் ஒன்றை மத்திய அரசு அறிவித்திருப்பது பிரச்சினையை மேலும் சிக்கலாகும் என்பது நிச்சயம். ஏனென்றால் எந்த உத்தரவையும் இடும் அதிகாரம் இந்த கண் காணிப்பு குழுவிற்கு இருக்காது.  அது மீண்டும் உச்ச நீதி மன்றதைதான் நாட முடியும். மத்திய அரசின் ஊசலாட்ட மனப பான்மையை தான் இது காட்டுகிறது.

கர்நாடகா காங்கிரஸ் ஆட்சியில் இருப்பதால்தான் இந்த ஊசலாட்டம் என்ற பழிக்கு மத்திய அரசு ஆளாவதை தவிர்க்க முடியாது.

தமிழக அரசு கடிதம் எழுத முடியும். கோர்ட்டுக்கு போக முடியும்.   தீர்த்து வைக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டுமே இருக்கிறது.     தனது கடமையில் இருந்து மத்திய அரசு தவறினால் ,, தமிழக விவசாயிகள் வஞ்சிக்கப் பட்டால் ,  நாட்டில் சட்ட ஒழுங்கு கெட்டால், மத்திய அரசே முழு பொறுப்பேற்க நேரிடும்.
வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V)
+91-91766-46041


This website uses cookies.