தாலி பெண்களுக்கு தேவையா? டி.வி. விவாதத்தை தடுத்து நிறுத்திய கைக்கூலிகள்!!! மீண்டும் விவாதம் நடத்துமா புதிய தலைமுறை? அல்லது பயந்து ஒதுங்குமா?

Share
             புதிய தலைமுறை டி.வி.'உரக்க சொல்வோம் " நிகழ்ச்சியில் தாலி என்பது கௌரவத்தின் அடையாளமா அல்லது பெண்கள் மீதான அடக்கு முறையின் அடையாளமா?  என்ற பொருளில் " தாலி பெண்களுக்கு தேவையா? என்ற விவாதம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தது.
               பெரியார் காலத்திலிருந்தே விவாதிக்கப் பட்டு வரும் விடயம்தான் தாலி.    கடவுள் மறுப்பாளர்கள் கூட தொன்று தொட்டு வழங்கும் மரபை மாற்ற மனமின்றி தாலி அணிவிப்பதை தொடர்கிறார்கள்.    
              இந்து என்பதன்  உண்மைப் பொருள் ' யாதும் ஊரே யாவரும் கேளிர்"   என்பதே.
              ஆனால் பலரும் இந்த பதத்தை தவறாகவே புரிந்து பயன் படுத் திக்கொண்டிருக்கிரார்கள்.     பார்ப்பனர் எழுதி வைத்ததை அப்படியே நம்பி கடைபிடிப்பவன் தான் இந்து என்பதாகவே இங்கு பொருள் கொள்ளப் படுகிறது.  
               அது உண்மையல்ல.     நான் பார்ப்பனீய ஆதிக்கத்தை ஏற்கவில்லை.     ஆனால் கடவுள் நம்பிக்கை கொண்டவன்.    நான் இந்துவா இல்லையா?      இல்லை என்று சொல்ல இங்கு எவருக்கு உரிமை இருக்கிறது.
              பெரியார் தான் இறக்கும் வரை இந்து என்று சொல்லிகொள்ளவுமில்லை.     ராமசாமி என்ற பெயரை மாற்றிக்கொள்ளவுமில்லை.    நீதான் நாத்திகனாயிற்றே   ராமசாமி என்ற எங்கள் சாமி பேரை வைத்துக் கொள்ள உனக்கு உரிமை இல்லை என்று எவரும் வாதாடி வென்றதும் இல்லை.
               என்.எஸ்.கிருஷ்ணன்  ஒரு பாடலில் " தாலி பெண்களுக்கு வேலி "   என்று பாடியிருப்பார். அதில் தாலி எப்படி மற்றவர்களால்  மதிக்க வைக்கப் படுகிறது என்பதையும் ஏன் அதேபோல் கணவன்மார்களுக்கும் ஏதாவது ஒரு குறியீடு , அதாவது மெட்டி போல ஏதாவது ஒன்று, கூடாது என்றும் கேட்டுவிட்டு கடைசியில், இங்கிலாந்து, அமெரிக்கா , ஜப்பானில் தாலி என்பது கேலி என்றும் முடித்திருப்பார்.    இப்போதும் வெளிநாடு செல்லும் இந்துப் பெண்கள் பலர் தாலியை மறைத்துக் கொண்டோ நீக்கிக் கொண்டோதான் வாழ்கிறார்கள். .  அதனால் அவர்களின் மண வாழ்க்கை எந்த விதத்திலும் பாதித்து விட வில்லை.
            விவாதம் நடத்தப் போவது இந்துப் பெண்கள்.    அவர்கள் தங்கள் உரிமைகள் கடமைகளை , விவாதிப்பதில் என்ன தடை. ?
             இப்போதைய பிரச்சினை விவாதம் நடத்துவது சரியா? தவறா?  அந்த கருத்து உரிமையை வன்முறை மூலம் தடுக்க முனைவது சரியா?
            காவல்துறை நடவடிக்கை எடுத்து சிலரை கைது செய்திருக்கிறது.       வழக்கு தன் போக்கில் போகட்டும்.
           இந்து முன்னணி என்று சொல்லிக்கொண்டு மூளைச்சலவை செய்யப் பட்டவர்களை தூண்டி விட்டு இம்மாதிரியாக வன்முறை நிகழ்த்துவது பிரச்சினை!
              புதிய தலைமுறை  டி.வி. நிர்வாகம்  இம்மாதிரியான மிரட்டல்களுக்கு அடி பணியக் கூடாது.  
            பல கட்சித்தலைவர்களும் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்கள்.
           முஸ்லிம் பெண்கள் பர்தா அணிவது தேவையா என்ற விவாதத்தை முஸ்லிம் பெண்களைக் கொண்டே நடத்தத் தயாரா என்று கேட்கிறார்கள்.    நியாயமான கேள்விதான்?   அம்மாதிரியான விவாதம் நடத்தப் பட்டால் அதற்கும் காவல்துறை தக்க பாதுகாப்பு கொடுக்கத்தான் வேண்டும்.
             மனிதர்களுக்காக மதங்களா?    மதங்களுக்காக மனிதர்களா?
    பல  பரிசோதனைகளுக்குப் பிறகு வள்ளலார் " மதம் என்னும் மாயையை ஒழித்தேன்" என்றார்.
            கொச்சைப்படுத்தும் நோக்கம் இல்லாமல் நடுநிலை நின்று யார் மனதும் புண்படாமல் நடத்தப்படும்  அறிவு சார்ந்த  எந்த விவாதமும் நிச்சயம் வரவேற்கப் பட வேண்டியதே!
              தாலி பெண்களுக்கு தேவையா என்ற விவாதத்தை தொடர வேண்டும்.

வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V)

This website uses cookies.