வைகோவின் சுயரூபம் –சேதுவில் வெளிப்பட்டது

Share
இதுவரை சேதுக் கால்வாய் திட்டம் தமிழர்களின் கனவுத் திட்டம் என்று முழங்கி வந்த ம.தி.மு.க. பொதுச்செயலர் வைகோ திடீரென்று நிலையை மாற்றிக் கொண்டு ,மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் என்பதால் சேதுக் கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற தன் எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.  இந்த ஞானோதயம் வைகோ விற்கு எப்போது வந்தது. ?
சேதுத் திட்டத்தை எதிர்த்த கட்சி தமிழகத்தில் 2009  வரை இல்லை.
உச்ச நீதிமன்றத்தில் சுப்பிரமணியசாமி வழக்கு தொடுத்த பின்தான் , அதுவரை வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி வந்த பா.ஜ.க.,ராமர் பாலம் என்ற வாலை நீட்டி முழக்கத் தொடங்கியது.
அவர்களுக்கு தமிழகம் தவிர ஏனைய மாநிலங்களில் மதப் பிரசாரம் செய்ய ஒரு கருவி கிடைத்து விட்டது.
அடுத்து ஜெயலலிதா –ஒரு பக்கம் காங்கிரஸ் தன்னோடு இல்லை- இன்னொரு பக்கம் அடுத்த தேர்தலில் மாற்று அணிக்கு தலைமை தாங்க பா.ஜ.க.விற்கு வாய்ப்பு அதிகம். – அதையும் தாண்டி உணர்வோடு உறைந்திருக்கும் பா.ஜ.க.பாசம். எல்லாம் சேர்ந்து அ,இ.அ.தி.மு.க.இதுவரை கொண்டிருந்த  சேதுக் கால்வாய் வேண்டும் என்ற கொள்கைக்கு கல்லறை கட்ட முடிவெடுத்து விட்டார்.   உச்ச நீதி மன்றத்தில் மாநில அரசின் சார்பில் திட்டம் வேண்டாம் என்று எழுதிப் போட்டு தமிழர்களின் தலையில் கல்லைப் போட்டார்.
மூன்றாவதாக வைகோ.    சிங்களப் பேரினவாதிகளுக்கு எதிராக முழங்கி வந்த  வைகோவுக்கு , கொழும்பில் சிங்கள கப்பல் முதலாளிகள் நட்டப் படுவதை தாங்கிக் கொள்ள முடியவில்லை.  
ராமர் பாலம் என்று சொன்னால் பா.ஜ.க.வை ஆதரித்தது போல் ஆகி விடும் என்பதற்காக மீனவர் வாழ்வாதாரம் என்ற ஆயுதத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார்.
சுயரூபம் வெளிப்பட்டு விடும் என்பதால் சில நாள் கழித்து மீனவர் வாழ்வாதாரம் குறித்து உத்தரவாதம் கொடுக்க வேண்டும் என்றும் பெரிய கப்பல்கள் சென்று வரும் வகையில் திட்டத்தை திருத்த வேண்டும் என்றும் மாறி மாறி பேசத் தொடங்கினார்.
தான்தான் தி.மு.க.விற்கு மாற்று என்று மனப்பால் குடித்துக் கொண்டிருந்த வைகோ, அது ஒருபோதும் நடக்க முடியாத கனவு என்று புரியத் தொடங்கியபோது ,வேறு வழி தோன்றாமல் ,தானும் தன் கட்சியும் பிழைத் திருக்க வேண்டுமென்றால் , ஜெயலலிதாவுடன் கை கோர்த்தால் தான் அது முடியும் என்ற நிலையில் ஜெயலலிதாவின் நிலைப்பாடையே எடுத்து , தன் விசுவாசத்தை வெளிக் காட்டி விட்டார். தமிழர்களை காட்டிக் கொடுப்பதாக ஆகி விடுமே என்ற விமர்சனங்களை பற்றி அவர் கவலை கொண்டதாக தெரியவில்லை.
காட்டிக் கொடுத்தால்தான்  தான் வாழ முடியும் என்றால் அதைச் செய்யத் தவறாத கருங்காலிகள் தமிழக வரலாற்றில் ஏராளமுண்டு.
அந்தப் பட்டியலில் வைகோவும் சேர்ந்ததுதான் காலத்தின் கோலம.
வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V)
+91-91766-46041


This website uses cookies.