இந்தி மொழி திணிப்பு பிரச்சினை – மோடி அரசின் அடுத்த சறுக்கல் !

Share
இந்தி மொழி திணிப்பு பிரச்சினை ; மோடி அரசின் அடுத்த சறுக்கல் !
வலைத் தளங்களில் அரசு அதிகாரிகள் அரசின் திட்டங்களை வெளியிடுவதில் இந்தி மொழிக்கு முதல் இடம் கொடுக்குமாறு மத்திய அரசு அனுப்பி இருக்கும் சுற்றறிக்கை இந்தி பேசாத மாநிலங்களில் சூட்டைக் கிளப்பி இருக்கிறது.
அதற்கு இப்போது அவசியம் அவசரம் என்ன?
இந்திய அரசின் தொடர்பு மொழிக் கொள்கையில் ஏதாவது மாற்றம் வந்து விட்டதா?
கலைஞர் எதிர்த்து அறிக்கை வெளியிட முதல்வர் ஜெயலலிதாவும் கண்டித்து அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்.
இந்திக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கப் படும் என்பதில் மற்ற மொழிகளுக்கு அது கிடையாது என்பது தெரிகிறது.
எந்த மொழிக்கும் தனி உரிமை கொடுக்க அரசியல் சட்டம் இடம் கொடுக்கவில்லை என்பது நடைமுறை என்றாலும் சட்டப்படி இந்தியும் ஆங்கிலமும் தான் ஆட்சி மொழிகளாக உள்ளன என்பதும் உண்மை.
இந்தி திணிப்பின் முதல் படியாக இது அமைந்து உள்ளது என்பதை மறைக்க முடியாது.
இந்தி பேசும் மாநிலங்கள் இந்தியும் ஆங்கிலமும் கலந்து பேசும் மாநிலங்கள் ஆங்கிலம் மட்டுமே பயன் படும் மாநிலங்கள் என மூன்று வகை பிரிவினைகளில் இப்போது தொடர்பு மொழி பயன் பாட்டில் இருக்கிறது.
இந்த உத்தரவு இந்தி பேசும் மாநிலங்களுக்கு மட்டும் என்றால் பிரச்சினை இல்லை.  மற்ற மாநிலங்களுக்கும் இது பொருந்தும் என்றால் இது திணிப்பாகவே பொருள் கொள்ளப் படும்.
இனி அடுத்தடுத்து இதுபோன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்ற அச்சம் நியாயமானது.
எனக்கு தமிழ் தவிர இந்தி ஆங்கிலம் மராட்டி தெலுங்கு வங்காளி போன்ற எல்லா மொழிகளும் பிற மொழிகள்தான்.
எந்த ஒரு மொழிக்கும் மத்திய அரசு சிறப்பு அந்தஸ்தை கொடுக்க சட்டம் இடம் கொடுக்கவில்லை.  அப்படி கொடுப்பதாக யாராவது உரிமை கோரினால் அந்த சட்டம் திருத்தப் பட வேண்டியதே ஆகும்.
இந்திய தேசிய மொழி என்று ஒன்றும் இல்லை.   ஆட்சி மொழி மட்டுமே இந்தியும் ஆங்கிலமும் உள்ளன. இந்தி பேசாதவர்களுக்கு ஆங்கிலம் இருப்பதால் எல்லாம் சுமுகமாக போய்க்கொண்டிருக்கிறது.
இதைக் கெடுக்க வேண்டிய அவசியம் இப்போது என்ன வந்தது. ?
முன்னேற்றம் என்ற வழியில் செல்ல வேண்டிய அரசு இந்தி திணிப்பு என்ற சுழலில் சிக்கி திசை மாற வேண்டாம்.
எதிர்ப்பு கண்டு எந்த மொழியையும் திணிக்க மாட்டோம் என்ற உறுதி மொழி கொடுத்தாலும் கூட அரசின் மீது விழுந்த இந்த குற்றச்சாட்டு ஒரு களங்கமாகவே விளங்கும்.
இந்தி பேசாத மக்கள் இரண்டாம் தர குடிமக்களாக ஒரே நாட்டில் வாழ விரும்ப மாட்டார்கள்.
அரசியல் சட்டத்தின் எட்டாம் அட்டவணையில் கண்ட மொழிகள் அனைத்திற்கும் ஆட்சி மொழி தகுதி கொடுப்பது ஒன்றே ஒற்றுமையை கட்டிக் காக்கும் ஒரே வழி.
இந்திய ஒருமைப்பாடு என்றாவது கேள்விக்குறியானால்  . அதற்கு இந்தித் திணிப்பே முக்கிய காரணமாக  இருக்கும்.
வி.வைத்தியலிங்கம்
வி.வைத்தியலிங்கம் (Vaithiyalingam.V)
+91-91766-46041


This website uses cookies.