தோற்றுக் கொண்டிருக்கும் திராவிடம் ? திராவிடத்தால் எழுந்தவர்கள் திராவிடத்திலேயே அழிய வேண்டுமா?

Share
ஆரியத்தால் வீழ்ந்தோம் என்று நம்பினோம்!
திராவிடத்தால் எழுந்தோம் என்றும் நம்பினோம்!
சென்னை மாகாணமாக இருந்தபோது தெலுகு கேரள பகுதிகள் நம்மோடு சேர்ந்து இருந்ததால்  ஆரிய ஆதிக்கம் அதிகமாக இருந்ததால் அவர்களிடமிருந்து நம்மைப் பாதுகாத்துக்  கொள்ள பார்ப்பனர் அல்லாதார் ஒன்று சேர வேண்டிய சூழ்நிலையில் திராவிடம்  பொருள் பொதிந்ததாக இருந்தது.
அன்றைய கால கட்டத்தில் அது சரி.
இன்று சூழ்நிலை என்ன?
மலையாளி கன்னடர் தெலுகர் எவருக்கும் திராவிடர் என்ற உணர்வு அறவே இல்லை.
அல்லது எவரும் திராவிடர் என்ற பெயரில் கட்சிகள் நடத்தியதில்லை.
எதனாலும் நாம் திராவிடர் இல்லை என்று ஆகிவிடப் போவதில்லை.
ஆனால் திராவிடம் பேசிக் கொண்டு இருப்பதாலேயே நமக்கு நாம் தமிழர் என்ற உணர்வு மரத்துப்போனது உண்மைதானே?
“திராவிட ” என்ற சொல் இடத்தையே  குறிக்கும் .    ஆனால் அந்த உண்மையைக் கூட அவர்கள் உணர்வதாக இல்லை.
தென்னிந்திய நடிகர் சங்க பெயரைக் கூட இங்கே  மாற்ற முடியவில்லை.
காவிரி, பெரியாறு அணை, பாலாறு பிரச்சினைகளை பேசி தீர்த்துக் கொள்ள 
திராவிடர்களால்  முடியவில்லை.
முடிவுரை எழுதும் கால கட்டத்தில் நாம் இருக்கிறோம்.
முத்தாய்ப்பாக அப்பாவி தமிழ்க் கூலித் தொழிலாளர்கள்  இருபது பேர் ஆந்திர போலிசால் என்கவுண்டர் என்ற பெயரில் படுகொலை செய்யப்பட்டு இறந்திருப்பது இன ஒற்றுமைக்கு அடித்த சாவு மணியாகவே கருதப்படும்.
காவிரி நடுவர் மன்றம் இறுதித் தீர்ப்பு செய்து மத்திய அரசின் இதழில் வெளி வந்தும் கூட அதை அமுல் படுத்த ஆணையம் அமைக்க மத்திய அரசு தயங்குகி றது.  
தமிழகத்திற்கு ஒதுக்கப் பட்ட நீரை தந்து விட்டால் மீதம் உள்ள நீரை நாங்கள் எப்படி வேண்டும் என்றாலும் பயன் படுத்துவோம் என்று சொல்லிக் கொண்டே மேக்கே தாதுவில் அணை கட்டி முடித்த பிறகு எங்களுக்கு போகத்தான் மீதி தமழ் நாட்டுக்கு என்று தகறாரு செய்யலாம் என்று திட்டமிட்டு செயல்படும் கர்நாடக அரசு , அதை வேடிக்கை பார்க்கும் மத்திய அரசு . பொறுத்துப் பார்த்து விட்டு தமிழர்கள் வேலை நிறுத்தம் செய்தால் போட்டியாக கன்னடர்களும் முழு அடைப்பு செய்கிறார்கள்.
திடீர் என்று பேருந்துகள் இரண்டு  மாநிலத்துக்கும் நிறுத்தப் படுகின்றன.
மாநில அரசுகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு இல்லை.
இதே நிலைமைதான் கேரளத்துக்கும் நமக்கும் இடையில்.
நடப்பது நடக்கட்டும்.    போதும் திராவிடம்.  இனி தமிழர்கள் என்றே  பறை சாற்றுவோம்.
திராவிடம் சொல்லி இனி வெல்ல முடியாது.    ஏமாளிகள் என்ற பெயர் தான் திராவிடம் பேசுபவர்களுக்கு பரிசு.
திராவிடத்தை எடுத்து விட்டால் பிரச்சினைகள் தீர்ந்து விடுமா?
வைத்துக் கொண்டு ஏமாறுவதை விட விட்டுவிட்டு வருவதை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்ளலாம்.
ஆரியத்தால் வீழ்ந்தோம் என்பது எப்படி உண்மையோ திராவிடத்தால் எழுந்தோம் என்பதும் உண்மைதான்.
ஆனால் தமிழியத்தால் மட்டுமே தமிழர்கள்  வெற்றி பெற முடியம் என்பதை நமக்கு கற்றுக் கொடுத்து கொண்டு  இருக்கிறார்கள் நமது திராவிட சகோதரர்கள்.
                   
வி.வைத்தியலிங்கம்
(Vaithiyalingam.V)
,.

This website uses cookies.