Connect with us

ரஞ்சன் கோகாய் மீது பாலியல் புகார்??!! பின்னணியில் பிரதமர் அலுவலகமா?

Ranjan Gogoi

Latest News

ரஞ்சன் கோகாய் மீது பாலியல் புகார்??!! பின்னணியில் பிரதமர் அலுவலகமா?

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது 35 வயது முன்னாள் பெண் உதவியாளர் கூறியிருக்கும் குற்றச்சாட்டும்

பெரிய மனிதன் நல்லவனாகத்தான் இருக்க வேண்டும் என்று இல்லை.

அதுவும் பாலியல் புகாரில் சிக்கிய பிறகு அந்த அனுமானம் அர்த்தமற்றது.

அதேநேரம் சதிவேலை என்ற குற்றச்சாட்டை ஒதுக்கி விடமுடியாது. எந்த குற்றச்சாட்டும் அதனதன் சாட்சியங்களின் அடிப்படையிலேயே முடிவு கட்டப்பட வேண்டும்.

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது 35 வயது முன்னாள் பெண் உதவியாளர் கூறியிருக்கும் குற்றச்சாட்டும் அந்த வகையை சேர்ந்ததுதான்.

இந்த ஆண்டு நவம்பர் மாதம் ஓய்வு பெறப் போகிறவர் அவர். முன்னாள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது குற்றச்சாட்டு கூறிய நான்கு நீதிபதிகளில் இவரும் ஒருவர்.    அவரது சட்ட அறிவும் பாரபட்சமற்ற தீர்ப்புகளும் ஐயத்துக்கு அப்பாற்பட்டவை.  பணத்தால் விலைக்கு வாங்க முடியாதவர் என்று ஒரு உச்ச நீதிமன்ற நீதிபதியை புகழ்வதே அவமானம்.  அப்படியென்றால் மற்றவர்கள் என்ற கேள்வி தானாகவே எழுமே?

அந்த பெண் உச்சநீதிமன்றத்தில் குறைந்த காலமே பணியாற்றியிருக்கிறார். அவரது கணவரும் கணவரின் சகோதரரும் தலைமைக் காவலர்கள். குற்றச்சாட்டு கூறிய பெண்ணும் கணவர் கணவர் சகோதரர் ஆகியோரும் பணி நீக்கம் செய்யப்படுகிறார்கள்.

குற்றச்சாட்டை 22 உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கும் பிரமாண வாக்குமூலமாக அனுப்பி வைக்கிறார். நான்கு இணைய தளங்களிலும் அந்த  வாக்குமூலம் வெளியாகிறது. அதன் அடிப்படையில் அரசு தலைமை வழக்கறிஞர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் முன்வைத்து வாதிடுகிறார்.

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பதினைந்து நிமிடம் தன்னிலை விளக்கம் அளிக்கிறார். விசாரணையை மற்ற நீதிபதிகள் நடத்தட்டும் என்கிறார். அப்போது அவர் கூறிய வார்த்தைகள் தான் மிக முக்கியமானவை. பிரதமர் அலுவலகத்தின் மீதே சந்தேக ரேகை படரும் வகையில் அது இருக்கிறது என்பதை கவனிக்க வேண்டும்.

” என்மீதான பாலியல் புகார் அடிப்படை ஆதாரம் அற்றது. நீதித்துறையின் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. எனது பனிக்காலம் முடியும் வரை பயமின்றி செயல் படுவேன். 20 ஆண்டு கால சுயநலமில்லாத என் சேவையில் தற்போது கூறப்பட்டுள்ள புகார் நம்ப முடியாதவை.

அடுத்த வாரம் மிக முக்கியமான வழக்குகளை விசாரிக்க உள்ள நிலையில் இது போன்ற பாலியல் புகார் தெரிவிக்கப்  பட்டுள்ளது. பாலியல் புகார் கூறிய பெண் குற்றப்பின்னணி உள்ளவர். அவர் மீது ஏற்கனெவே இரண்டு எப்ஐஆர்-கள் உள்ளன. அவர் ஒன்றரை மாதங்கள் மட்டுமே பணியாற்றினார். அப்போதே இந்த புகார் கூறப்பட்டது.

இது குறித்து பதில் அளிக்க வேண்டிய அவசியமில்லை என்று கருதினேன். எப்படி அவர் உச்சநீதி மன்றத்தில் வேலைக்கு சேர்ந்தார்? நீதிமன்றத்தின் மாண்பைக் குலைக்க மிகப் பெரிய சதி நடக்கிறது என சந்தேகிக்கிறேன். இதே நிலை தொடர்ந்தால் நேர்மையானவர்கள் நீதித் துறைக்கு வேலைக்கு வரவே தயங்குவார்கள்.

என்னிடம் பணம் பிடுங்க முயற்சித்து முடியாததால் இந்த புகார் கொடுக்கப் பட்டுள்ளது. இத்தனை ஆண்டுகள் பணியாற்றியும் என்னிடம் 6.80 லட்சம் மட்டுமே வங்கிக்கணக்கில் இருப்பு உள்ளது. இதை ஒரு சாதாரண உதவியாளர் மட்டுமே கூறுவதாக நான் நினைக்க வில்லை. மிகப்பெரிய சக்தி இதன் பின்னால் இருக்க வேண்டும்.  இரண்டு பதவிகள்தான் முழு சுதந்திரத்துடன் இயங்க கூடியவை. ஒன்று பிரதமர் மற்றொருவர் உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி. அடுத்து வருகிற வாரங்களில் தலைமை நீதிபதி விசாரிக்க இருக்கிற மிக முக்கியமான வழக்குகள், தேர்தல் நேரத்தில், விசாரணைக்கு வர இருக்கிற நிலையில் அவர்கள் தலைமை  நீதிபதியை அசைத்துப் பார்க்க விரும்புகிறார்கள். நீதித்துறை அச்சுறுத்தலுக்கு ஆளாகி இருக்கிறது என்பதை நான் நாட்டுக்கு சொல்ல விரும்புகிறேன். ” 

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் இந்த கருத்தை அரசு வழக்கறிஞர் மேத்தா, கே கே வேணுகோபால், வழக்கறிஞர் சங்க தலைவர் ராகேஷ் கன்னா போன்றோர் ஆமோதித்தனர்.

    தலைமை நீதிபதி குறிப்பிட்ட அந்த முக்கியமான வழக்குகள், ராகுல் காந்தி  மீது பாஜக எம்பி மீனாட்சி லேகி கொடுத்த நீதிமன்ற அவமதிப்பு புகார் , நரேந்திர மோடியின் வாழ்க்கை  திரைப்பட வெளியீட்டிற்கு தேர்தல் கமிஷன் அளித்த தடை, தமிழ்நாட்டில் தேர்தலில் வாக்காளர்களுக்கு கொடுக்கப் பட்ட லஞ்சப் பணத்தால் தேர்தலை தள்ளி வைக்கக் கோரும் மனு, போன்றவையாகும். அதற்கும் முன்பு ரபேல் விமான கொள்முதல் ஊழல் வழக்கை தள்ளுபடி செய்ததை பத்திரிகைகள் வெளியிட்ட ஆவணங்கள் அடிப்படையில் மறுஆய்வு செய்ய உச்ச நீதிமன்றம் தீர்மானித்தது குறிப்பிடத் தக்கது. 

எல்லாம் ஏதோ ஒருவகையில் பாஜக தொடர்புடையவை.

 ” பணத்தால் என்னை விலைக்கு வாங்க முடியாதென்று என் நல்ல பெயரைக் கெடுத்து நீதித்துறையை அசைத்துப் பார்க்க இந்த புகாரை பயன்படுத்தி இருக்கிறார்கள். ஊடக செய்திகளுக்கும் இதற்கும் ஒரு ஒற்றுமை இழை ஓடுவதை என்னால் உணர முடிகிறது”. என்கிறார் ரஞ்சன கோகாய். 

மற்ற இரண்டு நீதிபதிகள் ஆன அருண் மிஸ்ராவும் சஞ்ஜீவ் கன்னாவும் இதை விசாரிக்க முடிவு செய்தபோது இதை பத்திரிகைகள் பிரசுரிக்க தடை ஏதும் இல்லை என்றவர்கள் ஆனால் அவர்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்கள் .

அந்தப் பெண் கொடுத்த பிரமாண வாக்குமூலம் நான்கு இணைய தளங்களில் முழுவதுமாக வெளியாகி இருக்கிறது. அதில் சில ஆவணங்களையும் அவர் இணைத்துப் இருக்கிறார். அது அவரே வரைந்தது போலவே இல்லை. ஒரு நிபுணத்துவம் வாய்ந்த வழக்கறிஞர் வடிவமைத்து போலவே இருக்கிறது. எனவே யாரோ பின்னால் இருந்து இயக்குகிறார்கள் என்பதை தெளிவாகவே உணர முடிகிறது. ஆனால் அது உண்மையா புனைந்ததா என்பதை விசாரணை மட்டுமே வெளிக்கொணரும்.

தன்னை முதலில் சகஜமாக நடத்தியது. தன் மைத்துனருக்கு உச்ச நீதிமன்றத்தில் வேலை வாங்கி கொடுத்தது. அதற்கு நீ என்ன செய்வாய் என்று நீதிபதி கேட்டது.  அவராகவே தன்னை அணைக்க முயற்சித்தது. தான் தள்ளி விட்டு விட்டு வெளியே ஓடி வந்தது.  தன்னையும் தன் கணவரையும் அரசு விழாவுக்கு அழைத்து உபசரித்தது.   தன்னிடம் தன் கைப்பட பல விபரங்களை எழுதி வாங்கிக் கொண்டது. தன்னை அழைத்து நீதிபதியின் மனைவியின் முன்னால் நிறுத்தி அவர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்தது. பிறகு பணி இட மாற்றம் செய்து கடைசியில் தன்னை மட்டுமல்லாமல்  தன் உறவினர்களையும் பணி நீக்கம் செய்தது  என்று அந்த பிரமாண வாக்குமூலம் ஒரு நீண்ட கதையாக தொடர்கிறது.

காலமும் இதில் மிக முக்கியம். 2018ம் ஆண்டு ஆகஸ்டு 27ம் தேதி தலைமை நீதிபதி வீட்டு அலுவலகத்துக்கு பணி நியமனம் செய்யப்பட்ட அந்த பெண் தனக்கு இழைக்கப் பட்ட பாலியல் தொல்லை அதே ஆண்டு அக்டோபர் மாதம் 11ம் தேதி நீதிபதி வீட்டில் இழைக்கப் பட்டதாக கூறுகிறார். ஆனால் அந்த புகாரை 2019ம்  ஆண்டு ஏப்ரல் மாதம் 19 ம் தேதிதான் பிரமாண வாக்குமூலம் ஆக நீதிபதிகளுக்கு அனுப்புகிறார். ஏன்  இந்த தாமதம்? இடையில் அவரும் அவரது உறவினர்களும் பணி நீக்கம் செய்யப் பட்ட போது அதற்கு  இந்த பாலியல் சம்பவம்தான் காரணம் என்று அவர் ஏன் சொல்லவில்லை?

ஏன் இந்த விசாரணையையும் உச்ச நீதிமன்றமே கண்காணிக்க கூடாது? புலனாய்வு அமைப்புகள் தவறு செய்யாது என்பதை எப்படி  நம்புவது? ஏனென்றால் இதைப்போல் ஒரு குற்றச்சாட்டு இதுவரை எழும்பியதில்லை. நீதித்துறை தான் குரலற்றவர்களின் கடைசிப்  புகலிடமாக இருக்கிறது. 

அதுவும் சுதந்திரமாக இல்லை என்றால் ஜனநாயகம் பிழைப்பது அரிது.    ஜனநாயகத்திலேயே சர்வாதிகாரத்தை நியாயப்படுத்தி பேசுபவர்கள் அதிகாரம் நிலைத்து விட்டால் என்ன செய்ய மாட்டார்கள்?

பிரதமர் அலுவலகத்தின் மீது சந்தேக நிழல் படிந்திருக்கிறது. அதை துடைத்து  எறியவேண்டிய கடமை அவர்களுக்கு அதிகமாகவே இருக்கிறது. ஏனென்றால் தலைமை நீதிபதி இரண்டு நிறுவனங்களை மட்டுமே குறிப்பிடுகிறார். ஒன்று பிரதமர் இரண்டாவது தலைமை நீதிபதி. அதுவும் அடுத்த வாரம் வர இருக்கிற முக்கியமான வழக்குகளை குறிப்பிடுகிறார். அவை மத்திய அரசும் பிரதமர் அலுவலகமும்  சம்பத்தப்பட்டவை. அவைகளை அவர் குறிப்பிட வேண்டிய அவசியம் என்ன?

ஆளுநர் பந்வாரிலால் புரோஹித் மீது குற்றச்சாட்டுகள் கூறப்பட்டபோது அவசர அவசரமாக ஆளுநர் மாளிகை அதிகாரி ஒருவரை விசாரணை அதிகாரியாக நியமித்து ஒரு அறிக்கையை வாங்கி தவறு ஏதும் நிகழவில்லை என்று அவர் காட்டிய துரிதம்தாம் அவர் மீது சந்தேகத்தை அதிகப் படுத்தியது.

அதுவும் வரலாற்றில் இல்லாத வகையில் கூற்றம் சாட்டப்பட்ட நிர்மலாதேவிக்கு ஒரு வருடம் வரை பிணை கிடைக்காமல் செய்தபோதும் பிணையில் விட்ட பிறகும் அவர் ஏதும் பேசி விடக் கூடாதென்று அதிகாரிகள் காட்டும் தேவைக்கதிகமான கண்டிப்புகளும் சந்தேகத்தை இன்னும் அதிகப் படுத்திக்கொண்டே செல்கின்றன. என்றாவது ஒருநாள் உண்மை வெளியில் வந்துதானே தீர வேண்டும்.

அதைப்போல செய்யாமல்  ரஞ்சன் கோகாய் தான் மீது குற்றச்சாட்டு இருக்கும்போது அதை அவர் விசாரிக்காமல் மற்ற நீதிபதிகள் வசம் விட்டு விட்டதுதான் சரி.

ஒன்று நடந்தே  ஆக வேண்டும். இரண்டில் ஒருவர் தண்டிக்கப்பட்டே ஆகவேண்டும். குற்றச்சாட்டில் உண்மை இருந்தால் தலைமை நீதிபதி.   இல்லையென்றால் பொய்யாக குற்றம் சாட்டிய பெண்மணியும் அவருக்கு பின்புலமாக இருந்து இயக்கியவர்களும். அவர்கள் பிரதமர் அலுவலகத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் கூட. 

சுதந்திர இந்தியா இதுவரை கண்டிராத நீதித்துறையின் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டு இது. இதை உச்ச நீதிமன்றமும் மத்திய அரசும் எப்படி கையாளப்  போகிறது என்பதை பொறுத்துத்தான் இந்தியாவில் ஜனநாயகம் பிழைக்குமா மறையுமா என்பதை கணிக்க முடியும்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Latest News

To Top