பள்ளிச்சிறுவர்கள் செய்த ஆணவக் கொலை; நந்தீஷ்-சுவாதி கொலையை தொடர்ந்து நெல்லையில் பயங்கரம்?!!

honour-killing
honour-killing

ஆணவக் கொலைகளை தடுக்க சட்டம் கொண்டு வர வேண்டும்  என எல்லா அரசியல் கட்சிகளும் கோரிக்கை விடுத்து வருகின்றன.

சாத்தியமா என்பதை விட சாத்தியப்படுத்தப்பட வேண்டும் என்ற உணர்வு பரவத் தொடங்கி இருப்பது நல்ல அறிகுறி.

கிருஷ்ணகிரியில் நந்தீஷ் – சுவாதி இருவரில் ஒருவர் தலித். சுவாதி தலித் அல்லாதவர். இருவரும் திருமணம் செய்து கொண்டு தனியாக வாழ்ந்து வந்த நிலையில் சுவாதியின் தந்தையே வஞ்சகமாக கூட்டி சென்று இருவரையும் கொலை செய்துள்ளார்.

திருப்பூரில் இதேபோல் ஆணவக் கொலை செய்யப் பட்ட சங்கரின் மனைவி கௌசல்யா நந்தீஷ் குடும்பத்துக்கு ஆறுதல்  கூறியிருக்கிறார். தமிழ்நாட்டில் இதுவரை 185 ஆணவக் கொலைகள் நடைபெற்றிருப்பதாக கூறிய கௌசல்யா அரசின் சொல்லும் தகவல்கள்  பொய்  என்றார்.

ஆனால் நெல்லை வெள்ளன்குளி கிராமத்தில் நடந்தது அதைவிட கொடுமை.

இங்கே தன் அக்காவை திருமணம் செய்ய இருந்த பையனை அவளின் தம்பி தன் சகாக்களோடு சேர்ந்து கொலை செய்திருக்கிறான்.

தம்பி வயது 16. அவன் நண்பர்கள் அனைவரும் பத்தாம் வகுப்பும் பிளஸ் டூ முதலாண்டும் படிப்பவர்கள். மேலும் இருவர் பத்தாம் வகுப்பு  படித்து விட்டு வேலை செய்பவர்கள். எல்லாருக்கும் வயது பதினேழுக்குள் தான்.

இசக்கி சங்கர் கோனார் சத்தியபாமா தேவர். முதலில் சத்தியபாமா வீட்டில்  மறுத்தாலும்  இசக்கி சங்கர் படித்து விட்டு வேலையில் இருந்ததால் திருமணத்திற்கு சம்மதித்து தேதியும் குறித்து விட்டார்கள்.

தம்பியின் நண்பர்கள் செய்த கேலியில்தான் கொலை சிந்தனை தம்பிக்கு வந்திருக்கிறது. வேடிக்கை என்னவென்றால் தம்பியின் நண்பர்கள் எல்லாரும் தேவர் அல்ல. பல சாதிகளையும் சேர்ந்தவர்கள்.

ஆற்றுக்கு வந்தவனை கொலை செய்து விட்டு சிறுவர்கள் ஏழு பெரும் ஏதும் நடக்காது போல் பள்ளிக்கும் வேலைக்கும் சென்றிருக்கிறார்கள்.

கொலையுண்ட இசக்கி சங்கருக்கும் அவரது ஒன்று விட்ட சகோதரர்களுக்கும் சொத்து தகராறு  இருந்து வந்ததையும் காவல்துறை கணக்கில் எடுத்து விசாரித்து வருகிறது.

ஆக இது ஓர் சமுதாய சீரழிவு. புரையோடிபோயிருக்கும் நோய்.

சம்பந்தப் பட்டவர்களின் மீது வழக்கு தொடுத்து தண்டிக்கட்டும்.

அது போதுமா? நின்று விடுமா ஆணவக் கொலைகள்?

சமுதாய சீர்திருத்த இயக்கங்கள் உயிர் பெற வேண்டும்.

சாதி சங்கங்கள் உயிர்ப்போடு இருக்கும் அளவு சீர்திருத்த இயக்கங்கள் துடிப்போடு இருக்கின்றனவா?

ஏன் அரசியல் கட்சிகளுக்கு பொறுப்பு ஏதும் இல்லையா? அவர்கள் தங்கள் கட்சித் தொண்டர்களுக்கு கட்டளை ஏதும் பிறப்பிக்க வில்லையே ஏன்?

சொன்னால் கேட்கமாட்டார்கள் என்ற அச்சமா? வாக்குகளை பாதிக்கும் என்ற பயமா?

சட்டமும் வேண்டும். அதைதொடர்ந்து சீர்திருத்த பிரச்சாரமும் வேகம் பிடிக்க வேண்டும்.

அதை அரசியல் கட்சிகள்தான் தொடங்க வேண்டும்.

சாதிக் கட்சிகள் நடத்துபவர்கள் தயாராக இருக்க மாட்டார்கள்.

மற்றவர்கள் முன்னெடுக்கலாமே  !!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here