Connect with us

வள்ளலாரின் இறுதிப்பார்வை..!!

மதம்

வள்ளலாரின் இறுதிப்பார்வை..!!

வள்ளலாரின் இறுதிப்பார்வை

வள்ளுவர், திருமூலர் வள்ளலார் மூவரும் – தமிழர்களின் ஆன்மிக குருமார்கள். உலக மக்கள் அனைவருமே பின் பற்றத் தக்க கொள்கை பரப்பியவர்கள்.

நான் இன்று பேச வேண்டியது வள்ளலாரின் இறுதிப் பார்வை என்ன என்பது பற்றி.  .  எனவே முதல் பார்வை இடைப்பார்வை என்ன என்பதற்கு ஒன்று முதல் ஐந்து வரையிலான திருமுறைகளையும் இறுதிப் பார்வை என்ன என்பதற்கு ஆறாம் திருமுறையையும் எடுத்துக் கொள்ளலாம்.

இறை உணர்வில் முழுவதும் பக்குவப்படாத நிலையில் உள்ளவர்களுக்கும் அரைகுறையான இறை அனுபவம் உள்ளவர்களுக்கும் முதல் ஐந்து திருமுறைகளும், இறை உணர்வில் போதுமான அளவு அனுபவப்பட்டவர்களுக்கு ஆறாம் திருமுறையும் என மூன்று நிலையில் உள்ளவர்களுக்கும் வள்ளலார் பாடி இருக்கிறார்.

05.10.1823-ல் வள்ளல் பெருமான் அவதரித்தார்.. அவர் வாழ்ந்த 51 ஆண்டுகளை மூன்று கட்டமாக பிரிக்கலாம்..

1823-1850— பள்ளியில் பயிலாமல் கற்க வேண்டியவற்றை இறைவனிடத்தே பெற்றார். அவர் பாடி வழிபட்ட முதல் தலம் கந்த கோட்டம். ஒன்பதாம் அகவையில் இறைவனால் ஆட்கொள்ளப் பெற்று முருகப் பெருமானை வழிபடு கடவுளாகவும் திருஞானசம்பந்தரை வழிபடு குருவாகவும் திருவாசகத்தை வழிபடு நூலாகவும் கொண்டவர். இவரது 26  வது வயதில் 17 வயது வேலாயுத முதலியார் மாணாக்கரானார். திருவொற்றியூர் தியாகப் பெருமானையும் வடிவுடையம்மனையும்  வழிபட்ட காலத்தில் தான் முதல் மூன்று திருமுறைகளையும் பாடியிருக்கிறார்.

vallalar

vallalar

1851-1869 – தனது 28- வது வயதில் ஒழிவிலொடுக்கம் என்ற நூலை பதிப்பித்திருக்கிறார். அதன் பின், மனுமுறை கண்ட வாசகம், தொண்ட மண்டல சதகம் (தொண்டை மண்டலம் என்பதை மறுத்து), சின்மய தீபிகை, போன்ற நூல்களை பதிப்பித்து, 1857-ல்

சென்னை வாழ்வை நீத்து கருங்குழியில் வசிக்கத் தொடங்கிய காலத்தில் சிதம்பரம் சென்று வழிபடுவதை வாடிக்கை ஆக்கிக் கொண்டிருக்கிறார். இக்கால கட்டத்தில் தான் நான்காம் ஐந்தாம் திருமுறைகள் பாடப் பெற்றிருக்கின்றன. 1865ல் சன்மார்க்க சங்கம்  தோற்றுவிக்கிறார். கடவுள் ஒருவரே என்பதும் அவரை உண்மை அன்பால் ஒளி வடிவில் வழிபட வேண்டும் என்பதும், சிறுதெய்வ வழிபாடு கூடாது, உயிப்பலி கூடாது, சாதி சமய எவ்வகை வேறுபாடும் கூடாது, எவ்வுயிரும் தம்முயிர் போல் எண்ணும் ஆன்மநேய ஒருமைப்பாட்டுரிமையைக் கைக்கொள்ள வேண்டும், புராணங்களும் சாத்திரங்களும் முடிவான உண்மையை தெரிவிக்க மாட்டா எனவும் எரிக்காதே புதை எனவும் திதி கருமாதி வேண்டா எனவும் பற்பல கொள்கைகளை வகுத்து அவற்றை பரப்ப ஒரு சங்கத்தையும் நிறுவினார்கள். 1867-ல் முதல் நான்கு திருமுறைகள் அடிகள் காலத்திலேயே வெளிவந்தது. அதாவது எவற்றை நிராகரிக்க வேண்டும் என்று ஆறாம் திருமுறையில் சொன்னாரோ அவை அடிகள் காலத்திலேயே வெளியிடப்பட்டது வரலாற்றை பதிவு செய்வதற்காகவே என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

1870-1874 – வடலூர் அருகே மேட்டுக்குப்பம் சென்று சித்தி வளாகத்தில் அடிகள்  உறையத் தொடங்கினார்கள். வடலூரில் ஒளி வழிபாட்டிற்கென சத்திய ஞான சபையை அமைக்கிறார்கள். ஏழு திரை விலக்கி ஆன்ம ஒளியாகிய அருட்பெருஞ்சோதியை தரிசிக்கலாம் என்ற கருத்தை நிலை நாட்டினார்கள். ஆக வழிபடு தெய்வம் ஒளியானது..  தம் கொள்கைக்கு மேலே மஞ்சள் அடியில் வெள்ளை ஆகிய இருநிறம் கொண்ட தனிக்கொடி கண்டவர் வள்ளலார். மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில் ஒளி வழிபாட்டு முறை தொடங்கியது. 30.01.1874-ல் சித்தி வளாகத்தில் அருட்பெருஞ்சோதி ஆண்டவராய் நிறைந்தார் வள்ளல் பெருமான்.

அடிகளின் 1849 முதல் 1874  வரையான 25  ஆண்டுப்பணிகளில்,

1871 ல் சத்திய ஞான சபை அமைத்து, 1872-ல்  அருட்பெருஞ்சோதி அகவல் எழுதி , ஞானசபை வழிபாட்டு விதி வகுத்து சன்மார்க்க கொடி கட்டி பேருபதேசம் செய்து    1874  ல் மறைந்து நிறைந்தது வரையிலான மூன்று ஆண்டு வாழ்க்கையில் அவர் எதையெல்லாம் உபதேசித்தாரோ கடைப்பிடித்தாரோ  அதுதானே வள்ளலாரின் இறுதிப் பார்வையாக இருக்க முடியும்.

என்றும் எங்கும் இருக்கும் பரம்பொருள் ஒன்றுதான். அந்த ஒரே பரம்பொருளாகிய இறைவன்தான் அருட்பெரும்ஜோதி என்பதுதான் வள்ளல் பெருமானின் இறுதிப் பார்வை.

முதல் நான்கு திருமுறைகளும் 1867-ல் தொழுவூர் வேலாயுதனார் வெளியிட 1880-ல்  அடிகளின் மறைவிற்குப்பின் ஐந்தாம் திருமுறையும் 1885-ல் ஆறாம் திருமுறையும் வெளிவந்திருக்கின்றன.

முதல் திருமுறை 570 பாடல்களை கொண்டது.

இரண்டாம் திருமுறை 1388 பாடல்களை கொண்டது.

மூன்றாம் திருமுறை 612 பாடல்களை கொண்டது.

நான்காம் திருமுறை 458 பாடல்களை கொண்டது.

ஐந்தாம் திருமுறை 238 பாடல்களை கொண்டது. மொத்தம் 3266 பாடல்கள்.

இவை அனைத்திலும் விநாயகர், முருகப் பெருமான், சிவபெருமான், நடராசர், அம்மன்கள், திருமால், இராமர், திருமகள் கலைமகள் போன்ற தெய்வங்கள் அடிகளால் பாடப்பெற்றவர்கள். சமயகுரவர் நால்வர், திருவோத்தூர் சிவஞான தேசிக சுவாமிகள் போன்ற ஞானிகளும் பாடப் பெற்றிருக்கிறார்கள்.

அடிகள் சித்தி பெற்ற 6 ஆண்டுகளுக்குப் பின் 1880-ம் ஆண்டில் ஐந்தாம் திருமுறையை வெளியிட்ட தொழுவூர் வேலாயுதனார் ஆறாம் திருமுறையை வெளியிடும் முயற்சியில் ஈடுபடவில்லை.. அவர் மட்டுமல்ல இறுக்கம் இரத்தின முதலியார், புதுவை வேலு முதலியார், சிவானந்தபுரம் செல்வராய முதலியார், மயிலை சிக்கிட்டி சோமசுந்தர செட்டியார் ஆகியோரும் ஆறாம் திருமுறையை அச்சிட்டு வெளிப்படுத்த தலைப்படவில்லை.

vallalar12

vallalar

அடிகள் சித்தி பெற்று 11 ஆண்டுகள் கழிந்து இனியும் காலம் தாழ்த்தக் கூடாது என்ற எண்ணத்தில் வேலூர் பத்மநாப முதலியார் முயற்சியில் 1885 ல் சோடசாவதானம் சுப்பராய செட்டியார் அவர்களால் ஆறாம் திருமுறை வெளியிடப்பட்டது. அடிகளின் அடியவர்களுக்குக் கூட அதை வெளியிட காலம் கனியவில்லை என்ற அச்சம். காரணம் ஐந்து திருமுறைகளிலும் பாடப் பெற்ற தெய்வங்கள் அடிகளால் ஒதுக்கி வைக்கப் பட்டு ஒரே இறைவனாக அருட்பெரும்ஜோதியை அவர் அறிவித்ததுதான்.

வள்ளலாரின் இறுதி போதனை அவர் மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில் அருளிய பேருபதேசம்தான். அதில் அவர் மிகவும் தெளிவாக

“இதற்கு மேற்பட நாம் நாமும் முன் பார்த்தும் கேட்டும் லட்சியம் வைத்துக் கொண்டிருந்த வேதம், ஆகமம், புராணம் இதிகாசம் முதலிய கலைகள் எதனிலும் லட்க்ஷியம் வைக்க  வேண்டாம்.”

“இதுபோல் சைவம், வைணவம் முதலிய சமயங்களிலும் வேதாந்தம் சித்தாந்தம் முதலிய மதங்களிலும் லட்சியம் வைக்க வேண்டாம்”.

“நான் முதலில் சைவ சமயத்தில் லட்சியம் வைத்துக் கொண்டிருந்தது இவ்வளவு என்று அளவு சொல்ல முடியாது. அந்த லட்சியம் இப்போது எப்படி போய் விட்டது பார்த்தீர்களா? “‘

“ஏன் அவ்வளவு மிகுந்த அழுத்தம் எனக்கு அப்போது இருந்தது என்றால் அப்போது எனக்கு அவ்வளவு கொஞ்சம் அற்ப அறிவாக இருந்தது. இப்போது ஆண்டவர் என்னை ஏறாத நிலை மேலேற்றியிருக்கின்றார். இப்போது எல்லாவற்றையும் விட்டு விட்டதனால் வந்த லாபம் இது. “

“நமக்கு முன் சாதனம் கருணையானதினாலே ஆண்டவர் முதற்சாதனமாக அருட் பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்

பெரும்கருணை அருட்பெரும்ஜோதி என்னும் திருமந்திரத்தை வெளிப்படையாக எடுத்துக் கொண்டார். “

ஆறாம் திருமுறையில் எண்ணற்ற இடங்களில் சாதியையும் மதத்தையும் சடங்குகளையும் குப்பைகள் என்றும் சழக்குகள் என்றும் பிணிகள் என்றும் பல்வேறு  வார்த்தைகளில் விமர்சிக்கிறார். தனது சங்க ஆதரவாளர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறார் பாருங்கள்;

“சன் மார்க்க சங்கத்தீர் சிற்றடியேன் உமது

தாள் வணங்கிச் சாற்றுகின்றேன் தயவினோடும் கேட்பீர்

என்மார்க்கத் தெனை நுமக்குள் ஒருவநெனக் கொள்வீர்

எல்லாம் செய் வல்லநம திறைவனையே தொழுவீர்

புன்மார்க்கத் தவர்போலே வேறுசில புகன்றே

புந்திமயக் கடையாதீர் பூரணமெய்ச் சுகமாய்த்

தன்மார்க்க மாய்விளங்கும் சுத்த சிவம் ஒன்றே

தன்ஆணை என்ஆணை சார்ந்தறிமின் ஈண்டே   (  1734 )

ஆதியும்நடுவும் அந்தமும் இல்லா

அருட்பெருஞ் சோதிஎன் உளத்தே

நீதியில் கலந்து நிறைந்தது நானும்

நித்தியன் ஆயினேன் உலகீர்

சாதியும் மதமும் சமயமும் தவிர்த்தே

சத்தியச் சுத்தசன் மார்க்க

வீதியில் உமைத்தான் நிறுவுவல் உண்மை

விளம்பினேன் வம்மினோ விரைந்தே                  ( 1735 )

சாதியிலே மதங்களிலே சமயநெறி களிலே

சாத்திரச்சந் தடிகளிலே கோத்திரச்சண் டையிலே

ஆதியிலே அபிமானித் தலைகின்ற உலகீர்

அலைந்தலைந்து வீணேநீர் அழிதல்அழகலவே  ( 1473 )

வேதாக மங்களென்று வீண்வாதம் ஆடுகின்றீர்

வேதாக மத்தின்விளைவறியீர் – சூதாகச்

சொன்னவலால் உண்மை வெளி தோன்ற உரைக்கவிலை

என்ன பயனோ இவை  ( 1512 )

வேதநெறி ஆகமத்தின் நெறிபவுரா ணங்கள்

விளம்புநெறி இதிகாசம் விதித்தநெறி முழுதும்

ஓதுகின்ற சூதனைத்தும் உளவனைத்தும் காட்டி

உள்ளதனை உள்ளபடி உணர உரைத்தனையே ( 186 )

கலையுரைத்த கற்பனையே நிலைஎனக் கொண்டாடும்

கண்மூடி வழக்கம் எலாம் மண்மூடிப் போக

மலைவறுசன் மார்க்கம் ஒன்றே நிலைபெற மெய் உலகம்

வாழ்ந்தோங்கக் கருதியருள் வழங்கினை என் தனக்கே “  (187 )

இருட்சாதி தத்துவச் சாத்திரக் குப்பை

இருவாய்ப்புப் புன்செயில் எருவாக்கிப் போட்டு

மருட்சாதி சமயங்கள் மதங்களாச் சிரம

வழக்கெலாம் குழிக்கொட்டி மண்மூடிப் போட்டுத்

தெருட்சாறும் சுத்தசன் மார்க்கநன் நீதி

சிறந்து விளங்கஓர் சிற்சபை காட்டும்

அருட்ஜோதி வீதியில் ஆடச்செய் தீரே

அருட்பெருஞ் சோதிஎன் ஆண்டவர் நீரே.  (496)

சாதியும் மதமும் சமயமும் பொய் என

ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்சோதி  ( 4 )

ஆக பாடல் மற்றும் பேருபதேசம் ஆகிய இரண்டையும் பொருந்திப்பார்த்து வள்ளலார் சாதி, மதம் , தவிர்த்த சன்மார்க்க சங்கத்தைத்தான் இறுதியாக தன் அன்பர்களுக்கு விட்டுச் சென்றார் என்பது பற்றி யாருக்கும் ஐயம் இருக்க முடியாது.

ஆனால்  வள்ளலார் நாத்திகர் அல்லர்.

“நாத்திகம் சொல்கின்றவர்தம்  நாக்குமுடை நாக்கு “ என்பதே அவர் முடிபு.

அதேநேரத்தில் ஒருபோதும் பிராமண. சத்திரிய, வைசிய, சூத்திர வர்ணத்தை உருவாக்கிய சனாதன தர்மத்தை ஏற்றுக்கொண்டவர் அல்ல வள்ளலார். வள்ளலார் தன் பாடல்கள் மற்றும் உரைகளின் எந்தப் பகுதியிலும் இந்து என்ற வார்த்தையை பயன்படுத்தவில்லை என்பதை கவனிக்க வேண்டும். ஏனென்றால் அப்போது இந்து என்ற சொல்லே இல்லை. இந்து என்பது ஒரு மதமாக பார்க்கப்பட்டதும் இல்லை.

இந்தியா 1757 முதல் 1858 வரையிலும் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியிலும் 1858 முதல் 1947 வரை பிரிட்டிஷ் மகாராணி ஆட்சியிலும் இருந்தது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திற்குப்பின் தான், அவர்கள்தான், அறுவகை சமயங்களாக இருந்த சைவ, வைணவ, சாக்த, சௌர, சக்தி, கௌமார சமயங்களை இணைத்து இந்து மதம் என பெயர் சூட்டி உருவகம் கொடுத்தார்கள். இந்த அறுவகை சமயங்களுக்கும் மூலம் வேதம்.. வேதம் பார்ப்பனர்களுக்கு உரியது. அதனால்தான் மனிதன் தன் தொழிலுக்கு தன்னை அர்ப்பணிக்கிறான் என்பதற்கு அணியும் பூணூலை எல்லா தெய்வங்களுக்கும் அணிவிக்கிறார்கள் போலும்.

எனவே இந்து என்பது ஒரு  மதமே அல்ல. ஆங்கிலேயர் காலத்துக்குப் பின்னர் தான் இந்து என்ற சொல்லே நடைமுறைக்கு  வந்தது.

இந்துக்களுக்கு என்று சட்டங்கள் இயற்றியதும் ஆங்கிலேயர்கள்தான். உச்சநீதி மன்றமும் இந்து என்பது மதமல்ல வாழ்க்கை முறை என்று தீர்ப்பும் சொல்லி விட்டது. ஆனாலும் இந்து என்பது ஒரு மதமாக பாவிக்கப்படுவது மட்டுமல்ல யாரெல்லாம் சீக்கியர், பௌத்தர், ஜைனர் அல்லரோ அவர்கள் எல்லாம் இந்துக்கள் என்று எதிர்மறை விளக்கத்தோடு சட்டங்களும் அமுலில் இருப்பது என்னவொரு விந்தை.

இந்தியா முழுவதும் இப்போது அமுலில் இருக்கும் இந்து மதம் என்பது உண்மையில் பார்ப்பனீய மதமே ஆகும். அதனால்தான் எல்லா பார்ப்பனீய எதிர்ப்பு சீர்திருத்த மதங்களையும் விழுங்கி ஏப்பம் விட்டு இந்து என்ற மாயப் பெயரில் இயங்கி வருகிறது. லிங்காயத்துக்கள், அய்யா வைகுண்டர் வழி நம்பிக்கையாளர்கள், போல சன்மார்க்கிகளும் தனி அடையாளத்தோடு இயங்கும் உரிமை பெற்றவர்களாக இருந்தாலும் அவர்களும் இந்து என்ற வளையத்திற்குள்தான் அடங்கிக் கிடக்கிறார்கள்.

வள்ளலார் சீடர்கள் இந்து மத வளையத்துக்குள் இருந்து வெளியே வர முடியாமல் முடங்கிக் கிடக்கிறார்கள்.

தமிழர்கள் தங்கள் மூதாதையர்களை நடுகல் நாட்டி வழிபட்டு வந்தார்கள். எல்லா ஊர்களிலும் இருக்கும் அய்யனார்கள் அனைவரும் நம் மூதாதைகளே. அவர்களுக்கு வணக்கம் செய்தல் நம் கடமை. மாயோனும் முருகனும் தமிழர் கடவுளர் அல்லர் ..   முன்னோர்களே! ஆனால் வள்ளலார் சிறுதெய்வ வழிபாட்டை ஒதுக்கச்சொன்னார்.   ஏனென்றால் அங்குதான் ஆடு கோழி பலியிடல் நடக்கிறது. அது தவிர்த்து வணக்கஞ் செய்தல் தவறல்ல.

தான் அடிப்படையில் சாதி ஒழிப்புக் கிளர்ச்சிக்காரன் என்று அறிவித்து சாதிக்கு அடிப்படையாக வர்ணாசிரம  மதம் இருப்பதால் நாத்திகர் ஆனவர் பெரியார்.  நாத்திகம் பேசிய தந்தை பெரியார் கூட வள்ளலார் போதனைகளை விமர்சிக்கவில்லை. 1935-ம் ஆண்டு திருவருட்பா நூலின் ஆறாம் திருமுறையின் நூறு பாடல்கள் தொகுக்கப்பட்டு நூலாக வெளியானது. இந்த நூலைத் தொகுத்தவர் சாமி.

சிதம்பரனார். குடியரசு பதிப்பகம்தான் இதை வெளியிட்டது.

ராமலிங்க சுவாமிகள் பாடல் திரட்டு என்ற பெயரில் குடியரசு வெளியீடாக பெரியார் வெளியிட்டார். மேலும், திருவருட்பாவின் இந்த வெளியீடு எல்லா மக்களையும் சென்று சேர வேண்டும் என்று எண்ணி மலிவு விலை பதிப்பாகவும், கட்டணச் சலுகை அளித்தும் விற்பனையை அதிகரித்து வியந்து விளம்பரமும் கொடுத்தார். ராமனை ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் தனது ராமசாமி என்ற பெயரை இறுதி வரை மாற்றிக்கொள்ள பெரியார் முன்வரவில்லை.

பசும்பொன் முத்துராமலிங்க தேவர், வள்ளல் பெருமான் போன்ற ஞானிகள் அடைந்த நிலை எத்தகையது என்பதை 1949 ஜுன் மாதம் 13 ம் தேதி மதுரை வெள்ளியம்பல மண்டபத்தில் நடைபெற்ற தமிழ்நாடு  சன்மார்க்க தொண்டர் மகாநாட்டில் நிகழ்த்திய பேருரை பின்னர் ‘அருள் மறை தந்த வள்ளலார் ‘ என்ற தலைப்பில் புத்தகமாக வெளிவந்தது.

அண்ணாவும் திருமூலரை பின்பற்றி ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதே கொள்கை என்று அறிவித்தார்.

aringnar-anna

aringnar-anna

வள்ளலாரின் சத்திய ஞான சபையை பார்ப்பனர் கைப்பற்ற முயற்சித்தார்கள். அந்த முயற்சியை முறியடிக்க 135 ஆண்டுகள் தேவைப்பட்டது. ஆம். 1874 முதல் 24.03.2010-ல் உயர் நீதி மன்ற தீர்ப்பு வரும்வரை சத்திய ஞான சபையில் லிங்க வழிபாடு இருந்தது. சபாநாத ஒளி சிவாச்சாரியார் என்பவர் தான் பரம்பரை அர்ச்சகர் என்று கூறிக்கொண்டு ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து அதற்கு பிரதோஷ காலங்களில் அர்ச்சனைகள் செய்து சிவாலயமாகவே மாற்ற முற்பட்டார்.. ஆறாம் திருமுறையை வெளியிடவே கூடாது என்று நீதிமன்றத்தில் கட்சி ஆடினார்கள்.  வள்ளலாரின் பக்தர்கள் விழித்தெழுந்து பல ஆண்டுகள் வழக்காடி அந்த சிவலிங்கத்தை அப்புறப்படுத்தி ஜோதி வழிபாட்டை மீண்டும் நிலை நிறுத்த வேண்டி இருந்தது. அந்த வழக்கில் என்னென்ன கட்சிகள் சொன்னார்களோ அத்தனைக்கும் வள்ளலார் தனது இறுதிப் பேருபதேசத்தில் பதில் கூறி இருந்தார். தனது ஆறாம் திருமுறையில் வள்ளலார் குறிப்பிடும் சிவம், சித்சபை போன்றவை சைவ சமய குறியீடுகள் அல்ல. எல்லாவற்றிற்கும் தத்துவ விளக்கம் சொன்னார் வள்ளலார்..

ஏசு கிறிஸ்து கிறிஸ்தவர் அல்ல. இறை தூதர். அவர் மறைந்து பல நூற்றாண்டுகளுக்குப் பின் கிறிஸ்துவ மதத்தை உருவாக்கினார்கள். அதுவும் பலப்பல  பிரிவுகளாக பிரிந்து கிடக்கிறது.

படிப்பறிவே இல்லாத முகம்மதுவை தூதராக தேர்ந்தெடுத்து  இறைவன் குரானை அருளினான். அன்பை போதிக்கும் இஸ்லாம் இன்று எத்தனை பிரிவுகளாக பிரிந்து கிடக்கிறது. புனித ரமலான் மாதத்தில்  மசூதிக்குள் புகுந்து வெடி குண்டு வைத்து கொத்துக் கொத்தாய் கொலை செய்கிறானே அவனும் முஸ்லிம் என்றுதானே சொல்லிக்கொள்கிறான். கிறிஸ்தவ இஸ்லாமிய வேதங்கள் பற்றி தெரியப் படுத்தப் படாதவர்களுக்கு  நிரந்தர நரகம் என்று இறைவன் விதித்திருப்பானா?

புத்தம் ஒரு மதமல்ல. கடவுளை ஏற்றுக் கொள்ளாதது. அது ஒரு தர்மம். சனாதனத்தை எதிர்த்து உருவானது. அதுவும் தெரவாட, மஹாயான, வஜ்ராயன என்றும் அதன் கிளைகளாக 12 பிரிவுகளும் வந்து விட்டன. புத்த பிட்சுக்கள் மாமிசம் சாப்பிடுவது மட்டுமல்ல மனிதர்களை கொல்லத்தூண்டுகிறார்களே அவர்கள் புத்தரின் பெயரைக் கூட உச்சரிக்க அருகதை அற்றவர்கள்.

ஜைனம் அல்லது சமணத்தின் 23 வது தீர்த்தங்கரர் மகாவீரர்.. கடவுளை ஏற்காமல் கர்ம விடுதலையை போதிக்கும் மார்க்கம் சமணம். அவர்களும் திகம்பரர் ச்வேதாம்பரர் என பிரிந்து விட்டார்கள்.

குருநானக் எல்லா மதங்களில் இருந்தும் கடவுளர்களை துதிக்கும் பாடல்களை குரு கிரந்த சாகிப் என தொகுத்து அளித்தது  சீக்கியர்களின் மத நூலானது. புத்த ஜைன சீக்கிய மதங்கள் வர்ண தர்மத்தை எதிர்த்து உருவானவை. இன்று  இந்து  மத போர்வையில் இயங்கும் வர்ண தர்மத்துக்குள் அடங்கி விட்டன.

வள்ளலார் அன்பர்கள் துணிவுடன் செயல்பட வேண்டிய தருணம் இது. நமக்கு ஓரிறைதான். அது அருட்பெருஞ்சோதி ஆண்டவர். ஏனைய தெய்வ வழிபாடுகளை தவிர்க்க வேண்டும்.

சாதியை விட வேண்டும். உடனடியாக முடியாவிட்டால் சாதி ஒழிப்பை இறுதி இலக்காக கொண்டு சிறிது சிறிதாக அதன் தாக்கத்தை குறைக்க

வேண்டும்.  சாதி மறுப்புத் திருமணம் சிறந்த மருந்து. சாதி ஒழிப்புச் சட்டம் கொண்டு வர பாடு பட வேண்டும்.

புலால் மறுத்தல் வேண்டும். இதில் சமரசம் கொள்வது கூடாது.

இந்து என்று சொல்லிக் கொள்ளக் கூடாது. இது உடனடி சாத்தியம்  இல்லை. ஏனென்றால் எவரும் பெரும்பான்மை மக்கள் திரளில் தானும் ஒருவன் என்ற வலுவான மனோ நிலையை விட்டு விட்டு தான்  ஒரு  சிறுபான்மை என்று  சொல்லிக் கொள்ள விரும்ப மாட்டார்கள். மதம் சட்ட பூர்வமாக தடை செயப் படும் வரை காத்திருக்க வேண்டியதுதான். அல்லது மதமற்ற கடவுள் நம்பிக்கையாளன் என்பதை குறிக்கும் ஒரு குறியீட்டை அரசு ஆவணங்களில் உருவாக்கிட வைத்து அதில் சேர்ந்து கொள்ள வேண்டும். எரியூட்ட வேண்டாம் புதைத்திடுங்கள் என்பது சாத்தியமானதே.

ஆக எப்படி பெரும்பான்மை மதங்களை பின்பற்றுகிறவர்கள் அந்த மதங்களின் அடிப்படை கோட்பாடுகளுக்கு முரணாக நடந்து கொண்டு ஆனாலும் தாங்கள் அந்தந்த மதங்களை சேர்ந்தவர்கள் என்று காட்டிக் கொள்கிறார்களோ அப்படியே வள்ளலார் அன்பர்களும் இன்று அவரது கொள்கைகளுக்கு விரோதமாக நடந்து கொண்டே அவர் மீது வைத்திருக்கும் அபிமானத்தினால் நாங்களும் வள்ளலார் பக்தர்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம்.  கசப்பான உண்மைதான்.

மதம் வேண்டாம். கடவுளை ஒளி வடிவில் வழிபடுவோம் என்பதே கொள்கை. ஆனால் இன்று வள்ளலார் அன்பர்கள் தைப்பூச விழாவை சைவ சமய  சார்பாக கொண்டாடுவது எப்படி சரியாகும்? அதே நாளில் கொள்கைக்கு ஏற்ற வகையில் வழிபாட்டு முறையை மாற்றலாமே?

எந்த இறை உருவை பார்த்தாலும், அது ஒளி மயமான ஆண்டவரின் அம்சம் என்ற உணர்வு வரவேண்டும். தனிக்கடவுளர் அல்ல என்ற தெளிவு பிறக்க வேண்டும். புறச்சின்னங்களை அணிவதை தவிர்த்தல் வேண்டும்.  விபூதி குங்குமம் சந்தனம் ஆகியவை பிரசாதங்களாக வழங்கப் பட்டால் அவற்றை மரியாதைக்காக ஏற்றுக் கொண்டு பின்னர் அகற்றி விட வேண்டும்.

வீட்டில் வழிபடும் இடத்தில் மையமாக அகல் விளக்கு மட்டுமே இருத்தல் வேண்டும். சுற்றிலும் வேண்டுமானால் நம் முன்னோர்கள் படங்களை வைத்துக்  கொள்ளலாம் .. இறுதியாக, வள்ளலார் வாக்கின்படி,

சர்வ சித்தியுடைய கடவுள் ஒருவருண்டென்று அவரை உண்மை அன்பால் வழிபாடு செய்து பூரண சித்தியை பெற வேண்டுமென்பது சன்மார்க்கக் கொள்கை.  சுத்த சன்மார்க்கத்துக்கு முக்கிய தடையாகிய சமயம் மதம் முதலிய மார்க்கங்களை முற்றும் பற்றறக் கைவிட்டவர்களும் காமக்குரோதம் முதலியவைகள் நேரிட்ட காலத்தில் ஞான அறிவினால் தடுத்துக் கொள்பவரும் கொலை புலால் தவிர்த்தவர்களும் ஆகிய இவர்கள்தான் சுத்த சன்மார்க்கத்துக்கு உரியவர்கள் ஆவார்கள். ஒருவன் பிரார்த்தனை செய்வதில் அவனுக்கு மட்டும் செய்வது சரியல்ல. இந்த உலகமெல்லாம் வாழும்படி பிரார்த்தனை செய்தல் வேண்டும். அப்படிசெய்வதால் அதில் ஒருவனுக்கு வேண்டியவை எல்லாம் அடங்கி விடுகின்றன. இப்படித்தான் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

“பாதி இரவி லெழுந்தருளிப் பாவி யேனை யெழுப்பியருட்

சோதி யளித்தென் னுள்ளத்தேசூழ்ந்து கலந்து துலங்குகின்றாய்

நீதி நடஞ்செய் பேரின்ப நிதிநான்பெற்ற நெடும்பேற்றை

ஓதி முடியா தென்போலிவ் வுலகம் பெறுதல் வேண்டுவனே ‘”

தமிழர்களுக்கு ஆன்மிக வழிகாட்ட வள்ளலார் அன்பர்களை ஒருங்கிணைத்து செயல்பட ஒரு மைய அமைப்பு வலுவாக அமைய அந்த அருட்பெருஞ்சோதி ஆண்டவர்தான் அருள்புரியவேண்டும். அமைப்பு வலுப்பெற்றால் அது உலகம் முழுமைக்கும் வழிகாட்டியாக விளங்கும் என்பதில் ஐயம் இல்லை.

27.12.2018 அன்று எஸ்.ஆர்.எம் பல்கலை கழகத்தில் திருபுவனம் குரு.. ஆத்மநாதன் அவர்களின் இசைக்கடல் பண்பாட்டு அறக்கட்டளை சார்பில் நடந்த வள்ளலார் விழாவில் பேசியது.

தொடர்புக்கு; 7010484331 அல்லது vaithiyalingamv@gmail.com

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in மதம்

To Top