ஒரே ஒரு மாணவியுடன் பள்ளி இயங்க யார் காரணம்? 3000 பள்ளிகளை அரசு மூடுமா?

tamilnadu-government-school
tamilnadu-government-school

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியத்தில் உள்ள ஓர் பள்ளியில் ஒரே ஒரு மாணவியுடன் ஒரு தொடக்கப் பள்ளி  இயங்கி வருகிறது .

அதற்கு ஒரு தலைமை ஆசிரியர். ஒரு ஆசிரியர். ஒரு சத்துணவு அமைப்பாளர்.

அந்த பள்ளி நீடிக்க வேண்டுமா என்ற கேள்வி எழுகிறதா இல்லையா?

அந்த ஊரில் சுமார் ஐம்பது குழந்தைகள் பக்கத்து ஊரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறார்களாம்.

இதே பள்ளியில் படித்து பலர் அரசு பணிகளிலும் வேறு பல தனியார் பணிகளிலும் பணி புரிந்து வருகிறார்கள்.

பிறகு ஏன் அரசு பள்ளிக்கு மவுசு குறைந்து தனியார் பள்ளிகளை தேடி ஓட வேண்டும்?

சுமார் 3000 அரசு பள்ளிகளை மூட அரசு உத்தேசித்திருகிறது என்ற செய்திகளை அரசு மறுத்தாலும் 25 குழந்தைகளுக்கு கீழே இருக்கும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பக்கத்து பள்ளிகளில் இருந்து மதிய உணவை கொண்டுவரும்  திட்டத்தை மறுக்க வில்லை.

குழந்தைகள் எண்ணிக்கை குறைந்தால் இதெல்லாம் நடக்கும் வாய்ப்புகளை மறுப்பதற்கு இல்லை.

இதெல்லாம் தடுக்கப்பட வேண்டும் என்றால் பொதுமக்களின் பார்வை மாற வேண்டும். அரசுப் பள்ளிகள் தரம் குறைந்தவை தனியார் பள்ளிகள் தான் தரமுள்ளவை என்ற கருத்து நிலை  பெற்றுள்ளது. அதை மாற்ற வேண்டும்.

குறிப்பாக வசதி படைத்தவர்கள் அரசியல்வாதிகள் அரசு ஊழியர்கள் தனியார் பள்ளிகளில் படிக்க வைப்பதை கவுரமாக கருதுகிறார்கள். முடியாதவர்கள் கூட பிள்ளைகளின் எதிர்காலம் கருதி தனியார் பள்ளிகளில் சேர்ப்பதை கடமையாக கருதுகிறார்கள்.

கல்வித்தரம் அரசு பள்ளிகளிலும் தனியார் பள்ளிகளிலும் ஒன்றாக இருந்தாலும் கூட கவுரவம் பார்த்து தனியார் பள்ளிகளில் சேர்க்கிறார்கள்.

                அரசுப் பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட வேண்டும். பாடத்திட்டம் அரசு தனியார் பள்ளிகளில் ஒன்றாக இருக்க வேண்டும். வேறு பாடத் திட்டம் என்று தவறாக கருத இடம் கொடுக்கும் வகையில் ‘மெட்ரிக்’ என்ற பெயர் சூட்டும் முறை தடுக்கப் பட வேண்டும். 

இந்த தனியார் பள்ளி மோகம் முற்றாக களையப்பட வேண்டும். அதுவும் அரசுப்பள்ளிகள் பாதிக்கப் படா வண்ணம் பாதுகாக்கும் கடமை பொது மக்களுக்கு  இருக்கிறது.

அதை விட்டுவிட்டு நாங்கள் எங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்ப்போம் ஆனால்  அரசு பள்ளிகளை மூடினால் போராடுவோம் என்று குரல் கொடுப்பது கண்டனத்துக்கு உரியது.

அரசுப் பள்ளிகளை வலுப்படுத்துவோம் என்ற உணர்வு பரவி அதற்கு செயல் வடிவம் கொடுத்தால் மட்டுமே தமிழ் வளரும் தமிழர் வாழ்வு வளம்பெறும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here