Connect with us

இதற்குத்தானா இத்தனை தாமதம்? 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும்? 3-ம் நீதிபதி சர்ச்சை தீர்ப்பு?

18-MLAs-tamil-nadu

தமிழக அரசியல்

இதற்குத்தானா இத்தனை தாமதம்? 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும்? 3-ம் நீதிபதி சர்ச்சை தீர்ப்பு?

18/09/2017 ல் 18 எம் எல் ஏக்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தீர்ப்பு அளித்தார்.

14/06/2018 ல் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தகுதி நீக்கம் செல்லும் என்றும் நீதிபதி சுந்தர் தகுதி நீக்கம் செல்லாது என்றும் தீர்ப்பளிக்க 3 வது நீதிபதியாக நீதிபதி  சத்யநாராயனாவை உச்ச நீதி மன்றம் நியமித்தது.

31/08/2018 ல் பனிரெண்டு நாள் வாதத்துக்குப்பின் தீர்ப்பை ஒத்திவைத்த நீதிபதி இன்று 25/10/2018 ல் தகுதி நீக்கம் செல்லும் என்று தீர்ப்பு அளித்திருக்கிறார்.

பாமரனுக்கு சட்டம் தெரியாமல் விழி பிதுங்கி நிற்கிறான். ஆம். நம்பிக்கை இல்லா தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்த ஓ பி எஸ் ம் கூட்டாளிகளும் துணை முதல்வராகவும் எம் எல் ஏக்களாகவும் தொடர்கிறார்கள். ஆனால் அப்படி எந்த வாக்கும் ஆட்சிக்கு எதிராக அளிக்காமலே 18  எம் எல் ஏக்கள் தகுதி இழந்து நிற்கிறார்கள்.

இதைப்பற்றி  நீதிபதி இந்திரா பானர்ஜி தனது தீர்ப்பில் குறிப்பிடும்போது “குறைந்த பட்சம் தகுதி நீக்க மனு போடப்பட்ட பின்பாவது அவர்களுக்கு அறிவிப்பு அனுப்பி இருக்க வேண்டும். இருந்தாலும் அதை செய்யத் தவறிய காரணத்தாலேயே அதற்கு கெட்ட எண்ணம் காரணம் என்று அனுமானிக்க முடியாது ” என்று குறிப்பிடுகிறார்.

பின் அதை எப்படி எடுத்துக கொள்வது என்பது பற்றி அவர் விளக்க வில்லை.

முதல்வரை மாற்ற வேண்டும் என்று ஆளுநரிடம் மனு கொடுத்த செயல் மட்டுமே தகுதி நீக்க அடிப்படையாக அமைய முடியுமா என்பது இன்னும் புதிராகவே உள்ளது.

எடியூரப்பா வழக்கிலும் ஜார்கண்ட் அரசுக்கு எதிராக ஆளுநரிடம் மனு கொடுத்த வழக்கிலும் இரண்டு நீதிமன்ற தீர்ப்புக்குப் பின்தான் உச்ச நீதிமன்றம் சபாநாயகர் முடிவு செல்லாது என்று அறிவித்தது.

18 எம் எல் ஏக்களும் உச்சநீதி மன்றம் செல்லப் போகிறார்களா இல்லையா என்பது தெரியவில்லை.

ஆனாலும் உச்ச நீதி மன்றம் மற்றும் மக்கள் மன்றம் என்ற இரண்டிலும் நீதி தேடுவதுதான் அவர்களுக்கு வாய்ப்பாக இருக்கும்.

ஏற்கெனெவே இருபது தொகுதிகளில் மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் பொதுமக்கள் பாதிக்கப் பட்டுள்ளனர்.

தேர்தல் ஆணையம் செய்யும் தவறுகள் சொல்லி மாளாது. மத்திய அரசின் அறிவுருத்தல் இல்லாமலா இப்படி நடக்கும்?

 ஏன் திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளில் எல்லா மாநிலத் தேர்தல்களோடு இடைத் தேர்தல் நடத்த  தேர்தல் ஆணையம் முன்வரவில்லை? 

 ஏன் இன்னும் ஐந்து மாதத்திற்குள் பாராளுமன்ற தொதுத் தேர்தல்  வரப்போகிற நிலையில் கர்நாடகத்தில் பாராளுமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டும்? 

யார் கேட்பது இதையெல்லாம்? யாரிடம் கேட்பது?

நீதிபதி சத்யநாராயணா விடம் வழக்கு விசாரணைக்கு வந்தபோது இரண்டு நீதிபதிகள் எதில் எல்லாம் முரண்படவில்லையோ அவை தவிர்த்து எதில் முரண்பட்டிருந்தார்களோ அதில் மட்டுமே  இவர் தனது கருத்தை பதிவு செய்ய வேண்டும் என்ற நோக்கில் தான் வாதங்கள் முன் வைக்கப் பட்டதாக 18 எம் எல் ஏக்களின் வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியன் தெரிவித்திருந்தார்.

எனவே முரண் படாத பிரச்னை பற்றி வாதம் செய்யப்படவில்லை.

ஆனால் இப்போது நீதிபதி சத்யநாராயணாதான் தனிப்பட்டு மனதை செலுத்தி முடிவெடுக்கப் போவதாக சொல்லி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

இரண்டு மாறுபட்ட கருத்துக்களில் எது சரி என்று இவர் தீர்ப்பளிப்பார் என்று எல்லாரும் எதிர்பார்த்திருந்த நிலையில் இவர் தனியாக வேறு  ஒரு  முடிவை  எடுப்பார் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

முழுத் தீர்ப்பு விபரங்களும் இன்னும் வெளியாகவில்லை. முழுமையான தீர்ப்பை படித்தால்தால் நீதிபதி வேறு என்னென்ன கோணங்களில் பிரச்னையை அணுகியிருக்கிறார் என்பதை புரிந்துகொள்ள முடியும்.

நீதிமன்றங்களுக்கு அரசியல் சூழ்நிலையை கவனிக்கும் கடமை இல்லை. ஆனால் மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் தொகுதி மக்கள் துன்பப்படுவதை கவனத்தில்  எடுத்துக் கொள்ளலாம். எடுத்துக் கொண்டிருந்தால் தாமதங்களை தவிர்க்கலாம்.

நீதிபதிகள் எவ்வளவோ சிரமங்களுக்கு இடையே பணி செய்கிறார்கள். பாமரனுக்கு அது தெரியுமா?

நீதி வழங்கப் பட்டதை அவர்களும் உணர்கிராற்போல் கால அளவு நடைமுறைகள் பின்பற்றப் பட்டால் தான் நீதிமன்றங்களின் மாண்பு பாது காக்கப் படும்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in தமிழக அரசியல்

To Top